பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

உணவுப் பொருள்களின் வகை, அவற்றைச் சமைக்கும் வகை, அவற்றின் சுவை, அவற்றை உண்ணும் முறை முதலியன வேறுபடுகின்றன. அவ்வாறே இறைவனால் அடையும் முடிந்த முடிவான இன்பம் ஒன்றுதான் என்றாலும், அவனைத் தலைவனாக அடையப்பெறும் முறையும், அவனுக்கு ஆளாகும் வண்ணமும் பல்வேறு வகைப்படும். ஆதலால் ஒருவர் தாம் அவனைத் தலைவனாகப் பெற்றபடியே எல்லோரும் பெற்றிருப்பார் என்றும், தம்மை ஆட்கொண்டபடியே யாவரையும் ஆட்கொண்டிருப்பான் என்றும் சொல்ல இயலாது.

இந்த நினைவு அம்மையாருக்கு எழுகிறது, "இப்போது நான் அறிந்தேனே, அது மட்டுந்தானா அவனுடைய பெருமை?” என்று தம்முடைய கேட்டுக் கொள்கிறார்.

"அதுவே தகவு?”

சிவ பெருமானுடைய இயல்புகள் யாவுமே விசித்திரமானவை. வேறு யாரிடத்திலும் இல்லாதவை அவை. அவனுடைய அடையாள மாலை கொன்றை. கொன்றையை வேறு யாரும் அணிவதில்லை. அணியத்தக்க மலர்களையெல்லாம் பிறர் அணியும்படி வழங்கிவிட்டுத் தான் கொன்றைமலரை அணிகிறவன் அவன். அது கார்காலத்தில் மலர்வது, பனிக் காலத்தில் கருகி வாடுவது. அவன் அடையாள மாலை இப்படியென்றால், அவன் திருமுகத்தில் உள்ள கண் ஒன்றும் அவனை இனம் காட்டும். வேறு யாருக்கும் இல்லாத ஞானக்கண்ணாகிய நெற்றிக்கண்ணை உடையவன் அவன். அதுவே அவனுக்குப் பெருமை; நெற்றியிலே, கண் உடையவனாே' என்று வழங்கும் உலக வழக்கே அதன் பெருமையைக் காட்டும். இமையாத முக்கண், மூவரிற் பெற்றவர்” என்பது மாணிக்கவாசகர் திருவாக்கு. ஒப்பற்ற ஞானக்கண்ணை விளக்கமுடைய நெற்றியிலே படைத்த பெருமான் சிவபிரான். மற்றவரிடம் இயல்புகளை அறிந்து வரையறையாகச் செய்வது போல அவன் திறத்தில் சொல்ல ஒண்ணாது.