பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதுரைச் சொக்கர்

147

வாய்ப்பதில்லை. இருந்தாலும் அவன் கொடுத்ததையாவது. திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிற எண்ணம் பெரிதல்லவா?

அந்த எண்ணம் நம்மைப் புனிதமாக்குகிறது; உயர் வடையச் செய்கிறது. தான் பெற்ற இன்பம் உலகம் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிற உள்ளப்பாங்கு எளிதில் அமைவதில்லை. இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிற ஆசை இந்த உள்ளப் பாங்கை அமைப்பதற்கு வழி செய்கிறது. இறைவனுக்குக் கொடுக்க நினைக்கிறவன் அந்த இறைவன் உறைகின்ற உயிர்களிடத்திலே அன்பு காட்டுவதில் முனைகிறான். ஆருயிர்களுக்கெல்லாம் அன்பு செய்ய வேண்டும் என்று அவன் உறுதி கொள்ளுகிறான். இது இரண்டாவது படி. இந்தப் படியில் கால் வைத்தவன் உண்மையான முறையில் இறைவனே வழிபடுகின்றவன் ஆகிறான். ஆனால், முதற் படியையே காணுதவனுக்கு இரண்டாம் படியில் கிடைக்கும் இன்பம் தெரியாது.

ஒருவனுக்கு ஒரு அழகிய மலர் கிடைக்கிறது. எத்தனேயோ சிரமங்களுக்குப் பிறகு அது கிடைக்கிறது. அதை அவன் தன் காதலிக்குக் கொடுக்க நினைக்கவில்லை. அவளுக்குக் கொடுத்து அதனால் அவளும் அவனும் அடைகின்ற மகிழ்ச்சியைவிடப் பெரியதோர் இன்பத்தை அவன் பெற விரும்புகிறான். காதலியும் தானுமாகச் சென்று வடமதுரைச் சொக்கருக்கு அதை அர்ப்பணம் செய்ய அவன் எண்ணுகிறான்.

எத்தனையோ வகையான திருவிளையாடல்கள் புரிகின்றவர் அந்தச் சொக்கர். அவருக்கு இல்லாததொன்று மில்லை; இருந்தாலும் கிழவியின் பிட்டுக்கு ஆசைப்பட்டுப் பிரம்படி தின்கிறவரல்லவா? அவருக்கு அர்ப்பனம் செய்வதில் உள்ள பேரின்பத்தை அவன் எப்படியோ உணர்ந்து கொண்டான். ஆதலால் மலரை விரும்பும் காதலியை அழைத்துக்கொண்டே சொக்கருக்கு அம்மலரைச் சூட்ட அவன் விழைகின்றான்.