பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. சோழர் - மேலைச் சாளுக்கியர் உறவு முதலாம் இராசராசன் முதலாம் இராசராசன் சோழர் அரியணையில் வீற்றிருந்த சமயம், மேலைச் சாளுக்கிய சத்தியாசிரயன் என்பான், இரட்டபாடி ஏழரை இலக்க நாட்டிற்கு அரசனாக விளங்கினான். ஒரு காலத்தில், மேலைச் சாளுக்கியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நுளம்பபாடியை இராசராசன் சோழர் ஆட்சிக்கு உள்ளாக்கிக் கொண்டமையால் சத்தியாசிரயன், சோழரைப் பகைவராகக் கொண்டான். அதனால், இராசராசன் மகன் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர்படை சத்தியாசிரயனை வெற்றிகொண்டது: கடல் போன்ற சோழர் பெரும்படை கண்டு சத்தியாசிரயன் போர்க்களத்தை விட்டே ஓடி விட்டான் எனக் கூறுகின்றன, திருவாலங்காட்டுச் செப்பேடுகள். அப்போரில் கொண்ட பொன்னால், தஞ்சைப் பெரிய கோயில் பெருமானுக்குப் பொற்பூக்கள் வழங்கப்பட்டன: இப்போரின் விளைவாக துங்கபத்திரை ஆறு, சோழ நாட்டின் வடவெல்லையாகு மாறு சோணாடு பெருத்து விட்டது. முதலாம் இராசேந்திரன் கங்கை கொண்ட சோழன் எனப்படும் முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சிக்கு வந்த எட்டாவது ஆண்டில்