பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 139 பிந்தைய நான்கு முறைகளும் கூடித்திரிய வருணத்தவருக்கு உரியவையாக நெறிப்படுத்தப் பட்டன. ராட்சச முறை தவிர்த்த ஏனைய மூன்று முறைகளும் மூன்றாம் நான்காம் வருணத்தவருக்கு உரியனவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன. இந்நாட்களில், நூல் பிடித்த கோடாக இல்லை எனினும், இந்த எல்லா வகைத் திருமணங்களின் கூறுகளும் அன்றிருந்தாற் போன்றே சமுதாயத்தில் நிலவுகின்றன என்றே சொல்லலாம். இந்த நாட்டில் ஆரியர்களின் வருகைக்கு முன், தாய் வழிச் சம்பிரதாயமே மக்கள் பழங்குடிச் சமுதாயங்களில் நிலவி வந்திருக்கிறதென்று கொள்ளச் சான்றுகள் இருக்கின்றன. இதை முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். அந்தச் சம்பிரதாயத்தில், பெண் வீட்டை விட்டுப் போக மாட்டாள். பிறந்த வீடு உரிமையுள்ள வீடு. அவளை மனைவி யாக வரிப்பவன் அவள் வீடு தேடி வருவான். அவள் பெறும் மக்களை அவன் தன்னுரிமை பதித்துக்கொண்டு போகமாட்டான். இந்த நிலை தந்தை வழிச் சமுதாயமாக மாற்றம் பெறும் போது, மணமகன் சிறிதளவேனும் பொருள் கொடுத்து அவளைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்லும் வழக்கம் வந்தது. இதை ஏறக்குறைய ஜாமீன்' என்ற பொருளில் கொள்ளலாம் என்று தோன்றவில்லை? பெண் இந்த வீட்டுக்குரியவளில்லை; அவள் கணவன் வீட்டுக்குச் செல்கிறாள் என்ற மாற்றம் வேத காலத்தில் தொடங்கிவிடுகிறது. வேத காலத்து மணப்பெண் தனக்குப் பரிசிலாகக் கிடைத்த பொன், பொருள் எல்லாவற்றையும் கணவன் வீட்டுக்குக் கொண்டு செல்கிறாள். இந்த வீட்டு மகள் வேறு வீட்டுக்குச் செல்கிறாள் என்ற கனிவோடு, அவளுக்குச் சகோதரனும் மற்ற உறவினரும் கொடுக்கும் இப்பரிசுகளே, சீதனம் என்ற அவளுடைய உரிமைப்