பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

காலமும் கவிஞர்களும்


நாடுவளங் குன்றியபொழுது மழை பெய்யவும், நல்ல நாயகர்களை அடைந்து இம்மை நலம் எய்தவும், கன்னியர் காத்தியாயனி தேவியைக் குறித்து மார்கழி முழுவதும் நோற்கின்றனர் என்று இரண்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது. இரண்டிலும் கூறப்படும் மழைப்பாட்டுக்களை நோக்க இது நன்கு வலியுறும். இவ்வுலக நன்மைகளுக்கெல்லாம் மழை இன்றியமையாததால் அம்மழையினை உலகினர் அமிழ்தம் என்று கருதுகின்றனர். இதனை நன்கு உணர்ந்த ஆயச் சிறுமியர் மழைக் கடவுளைக் குறித்து வரம் வேண்டுகின்றனர். "மழையே! மழையே! வா, வா” என்று குழந்தையின் பாணியில் மழையின் அதிதேவதையை வரம் வேண்டுகின்றனர், மழைக் கடவுளை நோக்கி,

"ஆழி மழைக்கண்ணா ! ஒன்றும் நீ கைகரவேல்!"

என்று வேண்டுகின்றனர். 'நீ ஒரு வள்ளல் போல் வாரி வழங்க வேண்டும்; ஒன்றையும் கையிருப்பாக வைத்துக் கொள்ளாதே!' என்பது அவர்களின் வேண்டுகோள்.

மழை வருதலைக் குறித்து அவர்கள் மானசிகமாகக் காணும் காட்சி மிக அழகாக உள்ளது ; தம்முடைய குறிக்கோளை மிக அழகாக வெளியிடுகின்றனர். மேகங்களின் கருமை மழை வளத்திற்கு அறிகுறியல்லவா? ஆகவே, மழைக் கடவுள் கடலினுள் புகுந்து அங்குள்ள நீரை முகந்துகொண்டு, மிக்க ஆரவாரத்துடன் வானத்தில் தோன்றுவான் என்று எண்ணுகின்றனர். தவிர, மேகத்தின் நிறம் கண்ணனுடைய அருள் வடிவத்துக்கு ஒத்திருக்கின்றதல்லவா? மேகத்தின் கருநிறம் ஊழி முதல்வனுடைய உருவத்தை நினைவுபடுத்துகின்றதாம். மழை பெய்யும்பொழுது கருமேகங்களிடையே 'பளீச், பளீச்' என்று மின்னல் வெட்டு காணப்பெறுகின்றது... அம் மின்னல் அவனுடைய