பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவை நோன்பு

95


திருவாழியை நினைவுபடுத்துகின்றதாம். மின்னலுக்குப் பின் கேட்கப்பெறும் இடியோசை அவன் கையிலுள்ள வலபுரிச் சங்கின் நாதத்தை நினைவுபடுத்துகின்றதாம். மழைக்காலத்தில் சில சமயம் வானத்தில் தோன்றும் வானவில், அவனுடைய சார்ங்கம் என்ற வில்லின் அறிகுறியாகத் தோன்றுகின்றதாம். "சோ' என்று பெய்யும் மழையோ வில்லிலிருந்து வெளிப்படும் அம்பு மாரியை நினைவுக்குக் கொண்டு வருகின்றதாம். ஆகவே, அந்த ஆயச் சிறுமியர்,

"ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்!"

- திருப்-4.

(ஆழி-கடல்; ஆர்த்து -ஆரவாரம் செய்து; ஊழி முதல்வன்-கடவுள்; மெய்-உடல்; பாழி-வலிமை, பெருமை; அம்-அழகிய ; ஆழி-சக்கரம் ; வலம்புரி-வலமாகச் சுழிந்திருக்கும் சங்கு; அதிர்ந்து-முழங்கி; தாழாதே-தாமதமில்லாமல்; சார்ங்கம்-திருமாலின் வில்.)

என்று மழை வரம் வேண்டுகின்றனர். இவ்வுலகம் செழித்து மக்கள் உய்ய வேண்டும் என்று வைகறையில் நீராடும் பொழுது இவ்வழிபாடு நடைபெறுகின்றது. மழைபெய்து நாடு நலம் செழிக்கவேண்டுமென்று வெளிப்படையாக விரதம் பூண்டவர்கள், கண்ணனுடைய காதலைப் பெற்றுத் தாங்களும் இன்ப நலம் பெற்று வாழ வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றனர். மழையின்றித் தவிக்கும் நிலபுலங்கள் கண்ணன் அருளின்றித் தவிக்கும் மாதர் இதயங்களை ஒத்திருக் கின்றன.

ஆண்டாள் கோபியரின் கூற்றாக மழை வரம் வேண்டியதைப்போலவே, மணிவாசகப் பெருமானும்