பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

காலமும் கவிஞர்களும்


கட்டுதல் தவறு. பெரும் புலமையும் பேராற்றலுமுடைய கவிஞர்கள் தோன்றியிருந்துமிருக்கலாம். ஆனால், அந்தக் காலத்து அரசியல், பொருளியல் முதலிய காரணங்களால் அவர்களுக்குத் தக்க சூழ்நிலை வாய்க்கவில்லை எனக் கருதுவதே பொருத்தமாகும். ‘பருவத்தாலன்றிப் பழா’ என்ற முதுமொழியின் உண்மை இலக்கிய உலகுக்கும் பொருந்தும். தக்க சூழ்நிலை அமையாதபொழுது பேரிலக்கியங்களைப் படைக்க மேற்கொள்ளும் முயற்சி பயனற்றுப் போய்விடும். உலக இலக்கிய வரலாற்றில் இதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.

படைப்பாற்றல் செயற்படுவதற்குச் சில பொருள்கள் இன்றியமையாதவை. பக்குவப்பட்ட நிலையில் அப் பொருள்கள் அமையாவிடின் படைப்பு எங்ஙனம் முகிழ்க்கும்? அப்பொருள்கள் பக்குவ நிலையினை எய்தும்வரை இலக்கிய ஆசிரியன் காத்திருக்கத்தான் வேண்டும். இலக்கியத்தைப் பொறுத்த மட்டிலும் கருத்துக்கள் தாம் அப்பொருள்கள்; கருத்துக்களே இலக்கியங்களின் தனிக்கூறுகள். கருத்துக்கள் கலையுணர்ச்சியுடன் திறமையாகக் கையாளப்பெற்றால் அவை பேரிலக்கியங்களாக வடிவெடுக்கும். இலக்கியங்களில் காணப்பெறும் கருத்துக்கள் யாவும் சிறந்தவை; பண்பட்ட நிலையிலிருப்பவை. இதனால் வாழ்க்கையே இலக்கியமாக வடிவெடுக்கின்றது என்பது பெறப்படுகின்றது. அங்ஙனமே, இலக்கியமும் வாழ்க்கையை வழிப்படுத்துகின்றது என்பதையும் நன்கு உணரலாம். மொழியின் துணைக்கொண்டு வாழ்க்கை முறையினை எடுத்துக் காட்டுவதுதான் இலக்கியமாகும். சில ஆசிரியர்கள் இத்தகைய உண்மைகளைக் குறிப்பாகப் [1]


  1. Literature is thus fundamentally an expression of life through the medium of language. -W. H. Hudson.