பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலமும் கவிஞர்களும்

3


புலப்படுத்துவர்; வேறு சிலர் வெளிப்படையாக எடுத்துரைக்கவும் செய்வர்.

சமுதாய வாழ்வு இலக்கியத்தில் பிரதிபலிக்கும் என்று கூறினோம். இலக்கியத்தைப் படைக்கும் ஆசிரியன் தன் காலத்தில் தான் வாழும் சமுதாயத்தில் நடைமுறையில் உள்ள கருத்துக்களை இலக்கியத்தில் காட்டுவான். அவன், நிலவும் கருத்துக்களை ஒன்று சேர்த்து விளக்கம் செய்வானேயன்றிப் புதிய கருத்துக்களைக் கண்டறிவது அவன் நோக்கம் அன்று. புதிய கருத்துக்களைக் கண்டறிவதும் அவற்றை வெளிப்படுத்துவதும் மெய்ப்பொருளறிஞனின் செயலாகும். இலக்கிய ஆசிரியன் அக்கருத்துக்களைக் கலைத்திறத்துடன் காட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பு ஒன்றினை உண்டாக்கிக் கொள்ளுவான்; தான் காட்ட நினைக்கும் கருத்துக்களைக் கவர்ச்சிகரமானவையாய் ஓர் ஒழுங்கில் கோவையாக அமைத்துக் கொள்ளுவான். அவற்றைத் தான் ஏற்படுத்திக்கொண்ட வாய்ப்பில் மிகத் திறனுடன் கவர்ச்சிகரமாக அமையும்படியும் செய்வான். இவ்வாறு செய்வது எளிதான செயலன்று. எனவேதான், எல்லாக் காலங்களிலும் சிறந்த இலக்கியங்கள் தோன்றுவதில்லை; பேராற்றல் வாய்ந்த ஒரு சில ஆசிரியர்கள் தோன்றியிருந்தாலும் அவர்கள் சிறப்புடன் திகழ முடியாது போய்விட்டது என்றுதான் கொள்ளவேண்டும். ஆசிரியனிடம் திறனிருந்தும் ஏற்ற சூழ்நிலை அமையாததால் அவன் படைப்பு சிறப்புடன் மிளிர்வதில்லை. படைப்புக் கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொள்வது அவன் கையிலுமில்லை.

சிறந்த இலக்கிய ஆசிரியன் தன் காலத்திலிருந்து விடுபட்டு நிற்பவன் அல்லன். தமிழ் இலக்கிய வரலாறு இவ்வுண்மையை விளக்கிக் காட்டும். சங்க இலக்கியங்கள் தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்க்கை முறை