பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலமும் கவிஞர்களும்

9


தலைசிறந்தது. முன்னது நிலைத்து நிற்பது அன்று ; நாளடைவில் தானும் தேய்ந்து தன்மூலமாகிய பொருளையும் தேய்த்து விடக்கூடியது. பின்னதோ நிலைத்து நிற்பது; தானும் வளர்ந்து தன்மூலமாகிய மனத்தையும் நெறிப்படுத்திச் செம்மையாக்கும் தன்மையது. மனம் பல்வேறு கருத்துப் பொருள்களைத் துய்க்கும்பொழுது நாம் பெறும் இன்பம் எல்லையற்றது. காட்சிப் பொருள் களைவிடக் கருத்துப் பொருள்களைத் துய்க்கும் பொழுது தான் இவ்வின்பம் பன்மடங்கு மிகுந்து நிற்கும். அறிஞர்கள் யாவரும் இவ்வின்பத்தைத்தான் அவாவி நிற்பர். நம்மிடம் இயல்பாக அமைந்து கிடக்கும் விடுப்பு உந்தல் (Instinct of curiosity) இவ்வின்பத்தை வளர்க்கக் காரணமாகின்றது. இந்த உந்தலின் காரண மாகத்தான் நாம் பல்வேறு நூல்களைக் கற்கின்றோம். மனமும் யாதொரு பயனையும் எதிர்பாராது இத்துறையில் ஈடுபட்டு இன்பத்தின் எல்லையைக் காண முனைகின்றது. இந்த உந்தல் செயற்படுவதைத்தான் உண்மையான திறனாய்வு என்று சொல்ல வேண்டும். சமயம், அரசியல், காலதேச வர்த்தமானம் ஆகிய எல்லைகளையும் கடந்து அவற்றைச் சிறிதும் சிந்தையிற் கொள்ளாது உலக அறிஞர்களால் சிந்திக்கப்பட்டனவும் அறியப்பட்டனவுமான இலக்கியங்களைத் துய்க்க வேண்டும், அவற்றைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பெறும் முயற்சிதான் திறனாய்வாகும்.[1] இந்த அடிப்படையில் தான் தமிழ் இலக்கியங்கள் திறனாயப் பெறுதல் வேண்டும்.


  1. Criticism is a disinterested endeavour to learn and propagate the best that is known and thought in the World’-Mathew Arnold.