பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

காலமும் கவிஞர்களும்


உயர் மக்கள் உலகில்தான் இக்கணக்கு எடுக்கப் பெறுகின்றது. ஆனால், ஆசிரியர் உயர்திணை உலகையும் அஃறிணை உலகையும் உளங்கொண்டு ‘இறந்தாரை’ என்று அருளியுள்ளார். இதை எண்ணுந்தோறும் துறந்தார் பெருமை அளவின்றி வளர்ந்து நிற்கின்றது. என்னே இக்கற்பனையின் சிறப்பு!

இம்மாதிரியான கற்பனைகள் கம்பநாடனது. கலைக் கோவிலில் எண்ணற்றவை உள்ளன. வானர சேனை இலங்கைக்கு வழியமைத்ததைக் கம்பன்,

“மஞ்சினில் திகழ்தரு மலையை மாக்குரங்கு
எஞ்சுறக் கடித்தெடுத் தெறியவே நளன்
விஞ்சையில் தாங்கினான் சடையன் வெண்ணெயில்
தஞ்சமென் றோர்களைத் தாங்கும் தன்மைபோல்”

[1]

என்று குறிப்பிடுகின்றான். வானரங்கள் மஞ்சுசூழ் மலைகளைப் பெயர்த்து வந்து தூக்கி எறியும் காட்சியும், வானீர தச்சனாகிய நளன் அவற்றினை எளிதாக வாங்கும் காட்சியும் முறையே இரவலர் பலர் சடையப்ப வள்ளலின் வீடுநோக்கி வரும் காட்சியுடனும், அவ்வள்ளல் அவர்களை ஓம்பும் காட்சியுடனும் ஒப்புமை செய்யப்பெற்றுள்ளன. கம்பநாடன் உள்ளத்தில் ஊறிக்கிடந்த ‘செய்ந்நன்றியறிதல்’ என்ற உணர்ச்சி இந்த நிகழ்ச்சிகளை ஒன்றுபடுத்தியது என்று கூறலாம்.

அநுமன் மகேந்திர மலையினின்றும் கடல் தாவுதலைக் கூறும் இடத்தில் இவ்வகைக் கற்பனையை விளக்கும் பல அழகான பாடல்கள் உள்ளன. அநுமன் தாவி எழுந்தபொழுது மலையில் உண்டான பெரிய அதிர்ச்சியால், மயிலின் சாயலையொத்த அம்மலையிலிருந்த தேவ மாதர்கள் நடுநடுங்கி விட்டார்களாம் ; உடனே தத்தம்


  1. யுத்த காண்டம்—சேதுபந்—9.