பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலமும் கவிஞர்களும்

21


காட்சிகளை அப்படியே தொகுத்துக் கூறினால் அது படைப்புக் கற்பனையாகும் ; அவற்றுடன் தொடர்புள்ள வேறு நிகழ்ச்சிகளுடன் அவற்றை இணைத்துக் கூறினால் அது இயைபுக் கற்பனையாகும். இவ்வாறு கூறாது இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற்ற கவிஞன் தான் கண்டவற்றை அப்படியே கூறாது அக்காட்சிகளால் தன் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிகளை மட்டிலும் சித்திரித்தால், அதனைக் 'கருத்து விளக்கக் கற்பனை' என்றுகூறலாம். ஒரு நிகழ்ச்சியிலிருந்தோ ஒரு பொருளிலிருந்தோ அதன் கருத்து அல்லது தாற்பரியத்தை மட்டிலுங்கண்டு அவையடங்கிய பகுதிகளையோ அல்லது தன்மைகளையோ எடுத்துக் காட்டுவது ‘ கருத்து விளக்கக் கற்பனை ' யாகும்.[1] ஆங்கிலக் கவிஞர்களான வொர்ட்ஸ்வொர்த், பிரௌனிங் ஆகியோர் யாத்துள்ள கவிதைகளில் இத்தகைய கற்பனைகள் ஏராளமாக உள்ளன. இத்தகைய கற்பனைதான் கவிதைக்கு உண்மையான உணர்வைத் தருவது. கவிதைத் துறையில் மேதையாக உள்ளவர்கள், தாம் காணும் காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஒன்று விடாது அப்படியே வருணிப்பதில்லை ; வருணிப்பதை விட பொருளுணர்த்துவதில்தான் அவர்கள் கவனம் அதிகமாகச் செல்லும்.

ஒரு காட்சியில் காணும் அனைத்தையும் வெளிப் படையாகக் கூறுவதைவிட அதில் உணர்ந்த பகுதிகளை மட்டிலும் எடுத்துக் காட்டுவது சாலப் பயன் தரும். ஊனக்கண்ணால் பார்க்கும் பொருள்களின் அழகை


  1. - 18 The interpretative imagination perceives spiritual value or significance, and renders objects by presenting those parts on qualities in which this spiritual value resides.--C. T. Winchester.