பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/4

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காரைக்குடி அழகப்பா பயிற்சிக் கல்லூரி
முதல்வர்


உயர்திரு. ப. துரைக்கண்ணு முதலியார்
அவர்கள் அளித்த


முன்னுரை

விஞர்கள் காலத்தையும் வாழ்க்கையையும் சித்திரிக்கும் மேதைகள். அன்னாருடைய கவிதைகள் கற்பனைகளைத் தம்மகத்தே ஏற்று, சொல்லோவியங்களைத் தருகின்றன. இயற்கையோடு இயைபு காண்பவர்களும் கவிஞர்களே. அவர்கள் இயற்கைக் கூத்தினை இறுகப் பிடித்து இடத்திற்கேற்பத் தாம் சித்திரிக்கும் காட்சிகளில் இணக்கத்தையும் காண்பார்கள். அவர்களுடைய சித்திரங்கள் பலபடியாகப் பெருகிவிட்டால் காவிய நிலை எய்துகின்றன. காவியப் பாத்திரங்கள் நிலவும் நாடு பல்வேறுபாடுக்களுக்கிடையே எல்லா நாட்டினர்க்கும் எக்காலத்திற்கும் உடன்பாடாக அமைகின்றது. நாட்டு மக்கள் நலம்பெற இறை வழி பாட்டினை மேற்கொண்டு ஆன்ம ஆற்றலுக்கு வழி, தேடுகின்றனர்; உள்ளம் தூய்மை எய்தியபிறகு அவர்களது அறிவு ஊற்றுப் பெருக்கடைகின்றது; அதனால் அறிவியல் வளர்ச்சி பெற்று நாட்டுக்கு அப்பாலுள்ள அறிவினைத் தழுவுவதற்கு வேற்று மொழிகளில் அமைந்துள்ள கருத்துக்களையும் அவாவுகின்றனர். அத்தகைய முயற்சியில் தமது மொழியின் அகலத்தையும் ஆழத்தையும் கண்டு வியக்கும் நிலை ஏற்படுகின்றது. பிறநாட்டு நோக்கினொடு ஏற்படும் தொடர்பு காரணமாக வாணிகம் வளர்கின்றது. அங்ஙனம் தொடர்பு கொள்ளும் பொழுது தூய்மை நெறியினை அடிப்படையாகக்கொண்டு உறவினை அறநெறியில் அமைக்கும் முயற்சி உருவாகின்றது. வழிவழியாக அறநெறி தழைக்க வளரும் பயிர்களான வருங்கால மக்களுக்குப் பண்பூட்டும் வழியினைக் காணவும் வேண்டியதாகின்றது.