பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

காலமும் கவிஞர்களும்


 அது நமக்குத் தெரியாது ; ஆனால், அக்காட்சியை மணிமேகலை என்ற தமது நூலில் அமைத்துக்காட்டுகின்றார்.

மலர் கொய்வதற்கு மணிமேகலையும் அவள் தோழியாகிய சுதமதியும் உவவனம் என்ற வனத்துக்கு வருகின்றனர். அவ்வனத்திலுள்ள இயற்கைக் காட்சிகளையெல்லாம் சுதமதி மணிமேகலைக்குக் காட்டிக்கொண்டு வரு கின்றாள். அவற்றுள் இதனை முதற்காட்சியாக அமைத்துக் காட்டுகின்றார் கவிஞர்.

இதுதான் காட்சி: பகலவனின் கதிர்களாகிய சேனைக்குப் பயந்து உலகிலுள்ள இருட்படலங்கள் எல்லாம் திரண்டு ஓரிடத்தில் கூடியிருப்பதைப் போன்ற மரங்கள் செறிந்த சோலை ஒன்று உள்ளது. அங்குத் தும்பி என்ற ஒருவகை வண்டுகள் புல்லாங்குழல் இசை போன்ற ஒலியை எழுப்புகின்றன. இன்னொரு வகை வண்டினங்கள் யாழின் இசைபோல் ஒலித்துக்கொண்டிருக் கின்றன. கதிரவன் தோன்றி மறையும் வரை அவனுடைய கதிர்கள் சோலையுள் புகமுடியாது. ஆனால், குயில் பறவைகள் அச்சோலையுள் நுழைந்து இன்னோசையை இயக்கும். அத்தகைய சோலையுள் இயற்கையில் கிட்டும் வண்டினங்களின் பாடல்களாகிய பக்க வாத்தியங்களைத் துணையாகக்கொண்டு மயில் நாட்டியம் ஆடுகின்றது. அந்த மயிலின் நடனத்தை மந்திகள் பார்த்து மகிழ்கின்றன. இக்காட்சியைச் சுதமதி மணிமேகலைக்குக் காட்டுகின்றாள்.

பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு
இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
குழல் இசை தும்பி கொளுத்திக் காட்ட
மழலை வண்(டு)இனம் நல்லியாழ் செய்ய
வெயில்துழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர்
மயிலா(டு)அரங்கின் மந்திகாண் பனகாண். *

[1]


  1. * மணிமேகலை:பளிக்கறை புக்க காதை: (1-6 வரிகள்)