பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

காலமும் கவிஞர்களும்


“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்:
தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்
வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்.
கருமத்தை மேன்மேலும் காண்போம் ; இன்று
கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம் :’’

என்று கவிஞன் கூறுவதைக் காண்க. விதுரன் கொண்டு வந்த அழைப்பை ஏற்று ‘தீங்கதனைக் கருதாத தருமக் கோமான்’, தம்பியர், பாஞ்சால விளக்கு, பரிசனங்கள், படை முதலியவர்களோடு ‘நெடுங்கரத்து விதிகாட்டும் நெறியில்’ தீயோருக்குப் பயணமாகின்றான். பின்னால் வரப்போவதைக் கவிஞன் உணர்ந்து தான் அது குறித்துப் பச்சாதாபப் படுவதைப்போல்,

“நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவிவிழும்; சிற்றெறும்பால் யானை சாகும்;
வரிவகுத்த வுடற்புலியைப் புழுவுங் கொல்லும்;
வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்;
கிரிவகுத்த வோடையிலே மிதந்து செல்லும்;
கீழ்மேலாம் மேல்கீழாம் கிழக்கு மேற்காம்;
புரிவகுத்த முந்நூலார் புலையர் தம்மைப்
போற்றிடுவார் விதிவகுத்த போழ்தில் நன்றே.”

என்று தன் கூற்றாகவும் ஊழின் ஆற்றலை உணர்த்தியிருப்பது கருதத்தக்கது. இவற்றைத் தவிர, வேறுபல உண்மைகளையும் கவிஞன் ஆங்காங்கு உணர்த்திச் செல்வதைக் காப்பியத்தில் பல இடங்களில் காணலாம்.

இரண்டாவது : ஒரு காப்பியத்திற்குச் சிறப்பு அளிப்பது கதையின் புணர்ப்பு (Plot). பாண்டவர்கள் இராசசூய யாகம் செய்து பெற்ற பெரும்புகழ் துரியோதனன் மனத்தில் பொறாமைத் தீயை மூட்டுகின்றது.