பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

காலமும் கவிஞர்களும்


 மூவரும் சபதம் செய்வதுடன் காப்பியம் முடிவடை கின்றது. மேனாட்டு அறிஞர் கருத்துப்படி கதையின் புணர்ப்பு (Plot) நோக்கத்தின் பெருமையாலும் நிகழ்ச்சியின் மேம்பாட்டாலும் சிறப்படைகின்றது. ஒரு துன்பியல் நாடகத்திற்குக் கொடுக்கப்பெறாத காலக் கட்டுப்பாடு இதற்கு இல்லை. இதில் தொடர்ந்தாற்போல் முழு வளர்ச்சியைப் பார்ப்பதற்கு மனிதக் கற்பனைக்கு இடம் உண்டு. சிறு நிகழ்ச்சிகள் கூடியவரை நீக்கப்பெறினும் அவை பெரு நிகழ்ச்சிக்குத் துணை புரியுமானால் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முறையில் பாஞ்சாலி சபதத்தின் கதைப் புணர்ப்பு நன்கு அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

மூன்றாவது : காப்பியத்தின் சிறப்பாகக் கருதப் பெறுவது அதன் ஒருமைப்பாடு (The ideal of unity). அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து இவ்விதியை மேனாட்டார் சிறப்பாகப் போற்றி வருகின்றனர். துன்பியல் நாட கத்தைப் போலவே காப்பியத்திலும் ஒரே தொடர்ந்த செய்கை (Organic action) வளர்ச்சி பெறவேண்டும்; அது சாதாரணமான ஒரு சந்தர்ப்பத்தின் விளைவாகத் தோன்றி, வளர்ந்து, தெளிந்த அமைதியுடன் முடிவடைதல் வேண்டும். அரிஸ்டாட்டில் கருத்துப்படி ஒரு காப்பியத்திற்குத் தொடக்கம், நடு, முடிவு இருத்தல் வேண்டும்.* இராமாயணம் போன்ற ஒரு பெரிய இதிகாசக் காப்பியத்தில் ஒரு தனிச் செயலுடன் எண்ணற்ற கிளைக் கதைகள் அவை பொருந்தும் அளவுக்கு நுழைக்கப்பெறும். ஆனால், அவையனைத்தும் காப்பியத் தலைவனைப்பற்றியே கூறுவனவாக இருக்கும். பெரும்பாலும் இக் காப்பியம் பேரெடுப்பாகத் தொடங்குவதற்கும் இவ்விணைப்புக்கள் தெளிவாக இருப்பதற்கும்


  • இவற்றை வடநூலார் உபக்ரமம். மத்திய பாகம், உபசம்ஹாரம் என்று கூறுவர்