பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தற்குச் சில சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஈரோட்டின் கிழக்கு எல்லையில் காலிங்கராயன் கரையில் 'காரைவாய்க் கால் மைதானம்' என்னுமோர் இடம் இருக்கிறது. அதனருகில் பாம்புக் கோயில் ஒன்றுள்ளது. சுமார் 10 அடி நீளத்திற்குக் கிழக்கு - மேற்காகப் பாறையில் அழகிய புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுச் சுற்றியும் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயிலில் மற்றுமொரு சிறப்பு உண்டு. அப்பாம்பிற்கு அபிடேகம் செய்யும் நீர் எல்லாம் ஓர் ஆழக்குழியில் சென்று பின் புதைகால் வழியாகக் காலிங்கராயன் கால்வாயையே அடைகிறது. அக்கழிவு நீர்க்கால் வாய் வெளியே தெரிவதில்லை. இங்கு முன்பு ஓர் ஆண் தெய்வத்தின் சிலை இருந்ததாகவும் கூறுகின்றனர். அதுவே காலிங்கராயன் தெய்வத்தின் சிலையாக இருக்க வேண்டும் என்று எண்ணலாம். காலிங்கராயனுக்கும் வழி காட்டிய பாம்புக்கும் கோயில் எடுக்கப்பட்டதாக ஆங்கில வரலாற்று நூலும் வமிசாவளியும் கூறுகின்றன. இங்குப் பாம்புக்கோயில் மட்டும் எஞ்சியிருக்க, காலிங்கராயன் கோயில் அழிந்துவிட்டது போலும். கட்டியது யார்? இக்கோயிலை யார் கட்டியது? உரிமையுடையவர்கள் யார் என்று இக்கோயில் பூசை செய்யும் திருவேங்கட ராமசாமி என்ற முதியவரைக் கேட்டால் அவர் கூறும் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தும். "ஆசாரிமார்கள் இக்கோயிலைக் கட்டினார்கள், அவர்கள் இக்கோயிலுக்கு உரிமையுடையவர்கள். கொங்கு நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஆசாரி மார்கள் இக்கோயிலுக்கு வருவார்கள். அவர்கள் தாம் விழா முதலியன நடத்தினார்கள். அருகில் இருக்கும் மண்டபமும் அவர்களுடையதே! ஆனால் சிலகாலமாக இக்கோயில் ஐயர்கள் கைக்கு மாறிவிட்டது' என்று கூறுகின்றார் அப் பெரியவர்.