பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97 கால்டுவெல்

செய்யப்படும். தங்கள் முன்னோர்களை விட உரிமையாகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும் என்ற எண்ணமே மக்கள் மனத்தில் தோன்றியதாகத் தெரியவில்லை (பார்ப்பனக் கொடுமை தந்த ‘பரிசு’கள் இவை - ந.ச.). இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாட்சி தோன்றும் வரை மக்களின் உயர்வுக்காக எந்தவிதமான கடின முயற்சியும் எடுக்கப்படவில்லை. உழவுத் தொழில் ஒன்றுதான் அந்நாளைய பொது வேலையாய் இருந்தது. இத்துறையிலும் மக்கள் அதிக முயற்சி எடுத்து வெற்றி கண்டனரே அன்றி நாடாளும் மன்னர் எவ்விதப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை. முக்கிய ஆறுகளில் அணைகள் கட்டப்பட்டன. முக்கியமாகத் தாமிரபரணியில் ஓர் அணை கட்டப்பட்டது. நாடு முழுவதும் நீர் நிலைகள் நிறைந்திருந்தன. (நாயக்கர் வரலாறு பற்றி பேராசிரியர் சத்தியநாத ஐயர் முதன் முதலாக ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய நூல் சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாகக் கிடைக்கிறது. அதை அடியொற்றிப் பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் தமிழில் எழுதிய ‘நாயகர் வரலாறு’ பாரி நிலைய வெளியீடாகக் கிடைக்கிறது. ‘தமிழ்நாட்டில் பத்துக் குறிப்பு’ பற்றி திரு.அருணாசலம் எழுதிய ஆராய்ச்சி நூல் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாகக் கிடைக்கிறது. இவை மூன்றும் படிக்கத் தக்கன - ந.ச.).

தாமிரபரணி அணைக்கட்டு

தாமிரபரணியில் எட்டு அணைக்கட்டுகள் உள்ளன. அணைக்கட்டு என்ற தமிழ்ச் சொல்லில் ‘அணை’ என்பது நீர்த்தேக்கம் என்றும், ‘கட்டு’ என்பது கட்டப்பட்டது என்றும் பொருள்படும். (அணைக்கட்டு என்ற சொல் ஆங்கில மொழியில் அப்படியே கடன் சொல்லாக ஏறிவிட்டதால் இந்த விளக்கம் தருகிறார் கால்டுவெல்). அவற்றுள் ஏழு, ஆங்கிலேயர்கள் திருநெல்வேலிக்கு வருவதற்கு முன்னரே கட்டப்பட்டவை.

1. அவற்றுள் மிக உயர்ந்ததை அணைக்கட்டு (ஆங்கிலத்திலும் புகுந்த தமிழ்ச் சொல் - ந.ச.) என்பதை விட நீர்த்தேக்கம் என்றே சொல்லலாம். இதை உள்நாட்டு மக்கள் ‘தலை அணை’ அதாவது முதல் அணைக்கட்டு என்று வழங்கி வந்தார்கள். தாமிரபரணி பாபநாசம் அருவியிலிருந்து விழுந்து குறுகலான மலையிடுக்கு வழியே செல்கிறது. அம் மலையிடுக்குப் பாதை பெரிய கூழாங்கற்களாலும் பெரிய சங்கிலிக் கற்பாறைகளாலும் தடுக்கப்பட்டிருக்கிறது. மலைகளில் துவாரங்கள் செய்யப்பட்டு அவைகளில் கம்பங்கள் செருகப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் பனை மரங்களே.