பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 2

நடைமுறையில் வரலாறும் (இலக்கியத்தில்) விளக்கம் பெறாத பகுதியே ஆகிவிட்டிருக்குமோ? இதுவும் அதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். ஆயினும், தலைமுறைத் தலைமுறையாகப் பொதுமக்கள் காவிய அணிகளில் கொண்டிருந்த விருப்பமே இதற்கு முக்கியக் காரணமாகும். அரசன் ஒருவனது வரலாற்றிலோ, அல்லது நாட்டின் வரலாற்றிலோ நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் அது நடந்தவாறே எழுதி வைத்தல் அவர்கட்கு உற்சாகமற்றதாகவே தென்பட்டது. (தமிழில் சங்கப் பாடல்கள் தவிர - ந.ச.). காவியப் புலவனது வளமான கற்பனைத் திறம் மட்டின்றித் தொழிற்படின், அதே பொருளை இன்னும் சுவையுள்ளதாகச் செய்யலாம் என்று மக்கள் கருதினார்கள். எக்காரணமாயிருந்தபோதிலும், இந்தியாவிலுள்ள எப்பகுதியின் பழைய வரலாற்றுத் தொடர்பான உண்மை கிடைத்தாலும், அவை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உரிமையான இந்திய இலக்கியச்செல்வர்கள் வாயிலாகத் தோன்றியிருக்கும் செய்யுள், உரைநடை இலக்கியங்களின் மூலம் கிட்டாது. ஆனால், நாணயங்கள், கல்வெட்டுகள், பிற நாட்டவர்கள் எழுதிவைத்துள்ள புத்தகங்களின் வாசகங்கள் மூலம் மட்டுமே அவை கிடைக்கும் என்பது மறுக்க இயலாத உண்மையாகும். சான்றாகச் சோழ பாண்டியர்களின் பழைய வரலாறுகளைப் பற்றிய விளக்கத்தைச் சிங்களவரின் மகாவமிசம் தருகிறது. தென் இந்திய வரலாறு பற்றிய சுவையான சில செய்திகட்கு நாம் கிரேக்க - வடநாட்டு முகம்மதிய - ஐரோப்பிய கிறித்தவ வழிப்போக்கர்கட்கு (பயணிகட்கு) மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

1879 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் யான் நிகழ்த்திய சொற்பொழிவின் ஒரு பகுதியை இங்கு எடுத்துக்காட்டுவது பொருத்தமாகும்.

வரலாற்றுக் கல்வி, பழைய இலக்கிய ஆராய்ச்சி, நாட்டின் கல்வெட்டு ஆராய்ச்சி ஆகிய இவை கற்றறிந்த உள்நாட்டாரால் ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட்டாலன்றி, ஒரு போதும் முழுமையை அடைய இயலாது. தேசியப் பெருஞ் சிறப்பு வாய்ந்த முடிவுகளைக் காண்பது என்பதும் இயலாது. பிழையற்ற வகையில் வரலாற்றைக் காணும் ஊக்கம் படைத்த, ஐரோப்பிய முறையில் பயிற்சி பெற்ற கற்றறிந்த கல்கத்தா, பம்பாய் மக்களுட் சிலர், ஏற்கெனவே இவ்வகை ஆராய்ச்சித் துறையில் பயனளிக்கத் தக்கபடி ஈடுபட்டுள்ளனர். தென்னாட்டு அறிஞர்களும் இந்த அறிவாராய்ச்சிப் பந்தயத்தில் பின்னடையக்கூடாது என்ற உறுதியை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.