பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101 கால்டுவெல்

குறிப்பிட்ட தொகையும் எழுதப்பட்டுள்ளது (இப்படிப் பார்ப்பனர்கள் சங்க காலம் முதல் பெற்ற பேறுகள் கோடிகோடி! - ந.ச).

இந்தச் சத்திரத்தின் பயன்பாட்டிற்காகத் திருவாங்கூரிலிருந்து மிளகு அனுப்பப்பட்டு வந்தது. மிளகு திருவாங்கூரின் விளைபொருள். அதை அரசனுடைய அனுமதியின்றி வாங்க இயலாது. எனவே, அது இலவசமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. 970 எம்.இ. ஆண்டில் (கி.பி.1795இல்) கிழராமராஜா இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்பு அதற்குப் பதிலாக 180 கலிப்பணங்கள் சத்திரத்திற்குச் செலுத்தப்பட வேண்டுமென்று ஆணையிட்டான். இன்றும் அப்பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அணைக்கட்டின் தோற்றத்தைப் பற்றிய இக்குறிப்பு, கற்பனைக் கதைதான். மற்றவைகளைப் போன்றே இதுவும் நம்பத் தகுந்ததன்று; ஆயினும், கன்னடியனுடைய சிறப்புகளைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக்குகின்றது. செப்புச் சாசனத்திலிருந்து அவன் பார்ப்பனன் என்பது உறுதியாய்த் தெரிகின்றது. இச்சம்பவம் நடந்த காலம் கி.பி.242 என்று தகட்டில் குறிக்கப்பட்டுள்ள முழுவதும் கற்பனையே. திருநெல்வேலியிலுள்ள கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்வெட்டு எதிலும் கலியுக ஆண்டுக் குறிப்போ அல்லது சூபிடரின் ஆண்டுக் குறிப்போ பயன்படுத்தப்பட்டிருப்பதை நான் காணவே இல்லை. செப்புச் சாசனத்திலுள்ள ஒரு வாக்கின்படி இத்தேதியே எதிர்மாறாய் இருக்கிறது. கன்னடிய அல்லது கன்னடப் பார்ப்பனன் இந்த நன்கொடையை எந்த அரசனிடமிருந்து பெற்றானோ, அவன் பழைய பாண்டிய சேர சோழ அரசர்களுள் எவனும் அல்லன். ஆனால், அவன் இக்காலத்தைச் சேர்ந்த ஓர் அரசன், வேலூர் இராயர் பிரிவைச் சேர்ந்தவன். 1564 இல் விஜயநகர அரசு மகம்மதியர்களால் வெற்றிகண்டபோது முறியடிக்கப்பட்ட வர்களைச் சார்ந்த வலிமையுள்ள இளவரசர் பலர் பல இடங்களில் தம் நாடுகளை ஏற்படுத்திக் கொண்டனர். அத்தகைய தலைநகர்களுள் ஒன்றே வேலூர். 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்டநாயக்கர்களில் மிகச்சிறந்த அரசராகிய திருமலை நாயக்கர், வேலூர் இராயரைத் தமக்குக் கப்பம் கட்டும் தலைவராக ஏற்றுக் கொண்டார். பிரதாபருத்திரர் என்பது தெலுங்கு பரம்பரையில் வழங்கிவரும் சாதாரணப் பெயர். இதனால் அணைக்கட்டுக் கட்டப்பட்ட காலம் அண்மைக் காலமாகத்தானிருக்க வேண்டுமென்பது தெரிகிறது.

4. அடுத்த அணைக்கட்டு அரியநாயகபுரம். அரிய நாயகர் என்பவர் நாயக்கர் சரித்திரத்தின் ஆதிகாலத்தில் மிகச்சிறப்பு வாய்ந்தவர்.