பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 104

வேண்டும். 1293 இல் மார்க்கபோலோ கொல்லம் இராச்சியத்தையும் திருவாங்கூர் இராச்சியத்தையும் வேறுபடுத்தித் திருவாங்கூர் இராச்சியத்திற்குக் குமரி இராச்சியம் என்று பெயர் வழங்கியதாகத் கூறுகிறார். போர்ச்சுகீசியர் வந்திறங்கிய சமயத்தில் திருவாங்கூருடன் கொல்லம் இணைந்திருந்தது. பார்போஸோ கண்டது போல, காயலிலிருந்த கொல்லம் அரசன் திருவாங்கூரை ஆளும் அரசனே என்றால், திருவாங்கூர் அதிகாரவர்த்கத்தின்படி அவன் ஸ்ரீவீரரவிவர்மாவாகத்தான் இருக்க வேண்டும். பார்போஸோ கண்ட அரசன் உண்மையில் ஆட்சி செய்யும் அரசன்தானா என்பது ஐயமாயிருக்கிறது. ஏனெனில், அவன் உடன்பிறந்தார் அனைவரும் பொதுவாக ‘ராஜா’ என்றே வழங்கப்படுவர். அன்றியும், சின்னாளில் அதாவது சேவியர் காலத்தில், காயலில் வசித்துவந்தவன் இராஜாவின் உறவினன் என்பதை நாம் அறிகிறோம். எப்படியாயினும் பழங்காலப் போர்ச்சுகீசியர் காயல் திருவாங்கூர் அரசனுடையது என்று மதித்து வந்தனர் என்பது வெளிப்படையாய்த் தெரிகின்றது. திருவாங்கூர் அரசனே தென் திருநெல்வேலி நாடு முழுவதற்கும் சரியான வாரிசுதாரர் என்றும் கருதப்பட்டது. இது திருநெல்வேலி வாய்மொழி வரலாற்றிற்கும் கல்வெட்டிற்கும் பொருத்தமாய் உள்ளது. பெரும்பாலும் திருச்செந்தூர் கோவிலில் அகப்பட்ட ஆவணங்களில் இக்கருத்தே இருக்கின்றது. அக்காலத்தில் பாண்டிய அரசர் நசிந்துவிட்டனர். மதுரை நாயக்கர்கள் இன்னும் தங்கள் ஆட்சியைப் பலப்படுத்தவில்லை. எனவே, இயற்கையாகத் திருவாங்கூரின் எல்லைக்கருகேயுள்ள இடங்களின் அரசன் திருநெல்வேலியின் தென்பகுதியையாவது தன் ஆட்சிக்குட்படுத்த சமயம் பார்த்திருந்தான்.

1577 இல் போர்ச்சுகீசியர் இலங்கையிலுள்ள கொழும்பில் ஒரு கோட்டையையும் குடியேற்ற நாட்டையும் ஏற்படுத்தினர். 1522 இல் இவர்கள் மயிலாப்பூர் அல்லது சாந்தோமிற்குக் கொச்சியிலிருந்து ஒரு தூதுக்குழுவை அனுப்பினர். சாந்தோம் சென்னையில் உள்ளது. அங்கு அர்ச். தாமஸ் என்பவரின் உடல், சின்னமலை என்னுமிடத்திலுள்ள கோவிலில் காப்பாற்றப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அதைத் தேடி அக்குழுச் சென்றது. அதற்கு அவர்கள் திருநெல்வேலிக் கடற்கரை முழுவதையும் அடிப்புகுத்தி, வாஸ்கோடகாமாவினால் அறிவிக்கப்பட்ட இலாபகரமான முத்துக் குளித்தலையும் தங்கள் வசப்படுத்தியிருக்க முடியும் என்பதை நாம் ஐயுற இயலாது. இம்முத்துக்குளித்தல் வரலாற்றுக் காலம் தொட்டு அன்றுவரை கடற்கரைப் பகுதியில் நடைபெற்று வந்தது.