பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 134

 மகன் சப்தார் அலி தலைமையில் ஒரு படையை அனுப்பினான். அவனுடன் அவன் உறவினர் திவான் சந்தாசாகிபு அதிகார பூர்வமாய் வரிவசூல் செய்வதற்காகச் சென்றான். எனினும், உண்மையில் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்ற எதேனும் வாயப்பு ஏற்படுமா என்பதைக் கவனிக்கவே சென்றான். அங்கே இராணி மீனாட்சியம்மையாரைச் சந்தித்து அவருக்கும் அவர் நாட்டிற்கும் தீங்கு செய்யவில்லை என்று குர்ஆன்மேல் சத்தியம் செய்து கொடுத்ததாகவும் அதனால் அவன் அவனுடைய படையுடன் அவர் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டான் என்றும், அதிலிருந்து அவன் பலவந்தமாக மீனாட்சியார் வசமிருந்த அரசைக் கைப்பற்றிக் கொண்டு பிறகு மதுரையையும் பங்காரு திருமலை நாட்டை அடுத்துள்ள மாவட்டங்களையும் கைப்பற்றினான் என்றும் சொல்லப்படுகிறது.

இப்பொழுது சந்தா சாகிபு தன் வேடத்தைக் கலைத்துத் தன் சூழ்ச்சியை வெளிப்படுத்தினான். அவன் சூழ்ச்சிகளும் திட்டங்களும் வெற்றி பெற்றன. மதுரை நாடு முழுவதையும் அவனுடைய படைகள் கைப்பற்றிக் கொண்டன. பங்காரு திருமலை சரணடைந்தான். மீனாட்சியார் அனாதையாய் ஒரு கட்டடத்திற்குள் அகப்பட்டுக் கொண்டார். அது எந்த நேரத்திலும் எதிரிகளால் பிடிக்கப்பட்டு மீனாட்சியாருடன் சிறைப்படத்தக்க நிலையிலிருந்தது. 1736இல் சந்தா சாகிபு தானே மதுரைக்கு அரசனெனப் பிரகடனம் செய்தான். இராணியை அவன் அரண்மனையிலேயே அடைத்து வைத்துவிட்டு அரசனுக்குரிய அதிகாரத்தையும் ஆட்சியையும் ஏற்றுக் கொண்டான். சில நாட்களுக்குப்பின் இராணி மீனாட்சியார் தமக்கு எந்த வகையிலும் ஏதேனும் இடையூறு செய்யக் கூடுமென எண்ணியதுமன்றி, அவர் அவனுக்குச் செலவை ஏற்படுத்தும் வகையில் இடையூறாய் இருப்பதாக நினைத்தான். மேலும், அந்த ஏழைப் பெண் அரண்மனையிலிருப்பதால் விரும்பத்தகாத நிகழ்ச்சி ஏதேனும் நடைபெறலாமென அவன் வஞ்சக நெஞ்சம் எதிர்ப் பார்த்ததால், இதற்கெல்லாம் முடிவுகட்ட அவளைக் கொலை செய்வதெனத் தீர்மானித்தான். ஆனால், நல்வினைப் பயனாக இந்தப் புதிய குற்றத்தைச் செய்யும் சிரமத்திலிருந்து அவன் காப்பாற்றப்பட்டான். மீனாட்சியாரின் துன்பம் பொறுக்க இயலாததாகிவிட்டதால், அவர் வாழ்க்கையில் வெறுப்புற்று, நஞ்சு அருந்தித் தமக்குத் துரோகம் செய்த கயவனது சூழ்ச்சியில் சிக்காது மடிந்தார். (பார்க்க : நெல்சன் - மதுரை மாவட்ட வரலாறு - பக். 260)

திருச்சிராப்பள்ளியில் மராட்டியர்கள்

நாயக்கர்களுக்குப் பின் மராட்டியர்கள் செல்வாக்குப் பழமையான