பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 138

பொருளாய் இருக்கலாம். ஆனால், நெல் என்பதற்கு உமியுடன் இருக்கும் அரிசி என்ற பொருளை நான் எந்த அகராதியிலும் பார்க்கவில்லை (அந்தோ! - ந.ச.). அகராதிகளில் இச்சொல்லிற்குப் பொருள் இல்லை என்பதோடு, இந்தச் செய்தி முடிவடைய இயலாது. ஆனால், இந்தச் சொல்லிலக்கணம் சரியல்ல என்ற சந்தேகம் தோன்றுகிறது. அப்பெயரில் சாதாரண கற்பனைச் சொல்லிலக்கணம் மூங்கிலரிசியைப் பற்றிய எவ்விதமான மேற்கோளையும் குறிப்பதன்று. ஆனால் சாதாரணப் பொருளாகிய நெல் உமியுடன் இருக்கும் அரிசி என்பதையே குறிக்கிறது. (அகராதியில் இல்லாவிட்டால் ! - அப்பாடா ! - ந.ச.). அதைப் பற்றிக் கூறப்படும் கதை வருமாறு:


அக்காலத்தில் இந்த இடத்திற்கு மூங்கில் வேலி என்ற வேற்றுப்பெயர் இருந்திருக்க வேண்டும். இந்த இடத்தைச் சேர்ந்த ஒருவன் சிறிது நெல்லைத் தன் வீட்டிற்கருகே உலர வைத்துவிட்டுக் குளிப்பதற்காக ஆற்றுக்குச் சென்றான். அவன் குளித்துக் கொண்டிருக்கும்போது பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே அவன் ஆற்றிலிருந்து வீட்டிற்கு ஓடினான். நனைந்து வீணாகிவிட்ட நெல்லையே காணப்போகிறோம்; என்று எண்ணி ஓடிய அவனுக்கு, அங்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. அவனுக்கு வியப்பை உண்டு பண்ணும் விதத்தில் நெல்லைச் சுற்றி மழை பெய்திருந்ததே தவிர, நெல்லின் மேல் ஒரு துளி மழைநீர்கூடச் சிந்தியிருக்கவில்லை. எனவே, அவன் சிவபெருமானை நோக்கித் தன் நெல்லுக்கு வேலியிட்ட பெருமான் என்று துதித்தான். தன் நன்றிக்குரிய சிவபெருமானுக்கு ஒரு கோவிலையும் கட்டினான். அதிலிருந்து அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குப் புனித நெல்வேலி என்ற பொருளில் திருநெல்வேலி என்ற பெயர் மாற்றம் ஏற்பட்டது. தலபுராணம் இரு பொருள்களையும் கூறுகிறது. இரண்டாவது பொருளை உறுதிப்படுத்துவதற்காக மேலே சொன்ன கற்பனைக் கதை மேற்கோளாகக் காட்டப்படுகிறது. மேலும் திருநெல்வேலியைச் சிவனுக்குப் பகைவர்களான ரிஷிகள் வேள்விகள் வளர்த்து வசித்து வந்த துருகவனத்துடன் ஒப்புமைப்படுத்துகிறது தலபுராணம். அன்றியும், துருகவனத்திலிருக்கும் இலிங்கத்தையும் திருநெல்வேலியில் மூங்கிலிலிருந்து உண்டான இலிங்கத்தையும் ஒப்புமைப்படுத்துகிறது. எனவே, குறிப்பிட்ட ஒரு விழாக்காலத்தில் ஒரு சிறு மூங்கில் செடி இலிங்கத்திற்கருகே வளர்ந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது (இப்படி எத்தனையோ இயற்கைப் பெயர்களுக்கும் சமயம் காரணமாகப் புராணக் கதைகள் பொருத்தப்பட்டுவிட்டன. - ந.ச.). திருநெல்வேலி கோவிலில் வணங்கப்படுகின்ற சிவபெருமான் மனைவி காந்திமதி என்று