பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149 கால்டுவெல்


உயிருடன் விடவில்லை. இத்தகைய பயங்கரக் கொடுங்கொலைகளைச் செய்ததில் மிக்க பொறுப்பேற்றுக் கொண்ட படை வீரர்களும் அலுவலர்களும் ஆங்கிலேயரில் சிறந்த வீரர்களே ஆவார்கள். அவர்களில் பலர் கர்னல் லாரென்ஸ் தலைமையில் திருச்சிராப்பள்ளியில் போர் புரிந்தவர்கள் என்பதை நாம் வருத்தத்துடன்தான் தெரிவிக்க வேண்டும். ஆனால், மனித இயற்கையை எண்ணிப் பார்ப்பவர்கள். “கொடுங்குணம் வீரத்திற்கு ஏற்புடைத்தன்று” என்ற பொது வசனத்தை எதிர்ப்பதற்குத் தக்க பல காரணங்களையும் அதற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளையும் காண்பார்கள். (கொலையாளிகள் இனத்திலும் மனச்சான்று போரிடும் போலும்! - ந.ச.)

நெல்லிக்கோட்டையா அல்லது நாட்டக்கோட்டையா?

பல ஆண்டுகளாக இருந்த நெல்லிக்கோட்டையைப் பற்றி எந்தச் செய்தியையும் கேட்டறிய இயலவில்லை. மற்றொரு செய்தியிலிருந்து இக்கோட்டை களக்காட்டுக்கு அருகேயுள்ளது என்பது தெரிகிறது. ஆனால், இங்கு அந்தக் கொலைப் பாதக முற்றுகையைப்பற்றி எவ்வித செவிவழிக் கதையும் இல்லை. எனவே, இக்கதை முழுவதும் உண்மையன்று என்று எண்ணத் தொடங்கினேன். நாளடைவில் நான் ஒரு பாழடைந்த கோட்டையிடத்தைக் கண்டுபிடித்தேன். அது பாளையங்கோட்டைக்குத் தென்மேற்கே சுமார் 35 மைலிலும் அறப்பாலிக்குக் கிழக்கே ஆறு மைல் தூரத்திலும் தனியான ஓர் இடத்தில் அமைந்துள்ளது. அந்த இடத்தின் சரியான பெயர் நாட்டக் கோட்டை; நெல்லிக்கோட்டை அன்று. ஆனால் இந்தச் சிறப்பில்லாத விலக்குடன் உள்ள இந்த இடத்தைப் பற்றிய செவிவழிக் கதை ஓர்மினுடைய குறிப்புடன் பொருந்துகிறது. செவிவழிச் செய்தியாய் இக்கோட்டையின் உரிமையாளர் ராஜா என்று வழங்கப்படுவதாலும், இக்கோட்டையில் அவர் வசித்த வந்த இடம் இன்னும் 'அரண்மனைக் குன்று' என்று வழங்கப்படுவதாலும் அவர் முக்கியம் வாய்ந்த மனிதராய் இருக்கவேண்டுமென்பது தெரிகிறது. அவருடைய சந்ததியார் திருவாங்கூரிலுள்ள பாஞ்சலிங்கபுரம் என்று வழங்கப்படும் இடத்தில் தஞ்சமடைந்தனர். -

இந்தப் படையெடுப்பின்போது வசூலிக்கப்பட்ட வரிப் பணத்தில் படையினரின் செலவுக் கணக்கு ஒன்றுமேயில்லாமல் வரிப்பணத்தில் ஒரு பகுதி மகபுஸ்கானால் கொள்ளையிடப்பட்டது. அரசாங்கத்திடம் கடன்பெற்றுக் கணக்கு வைத்திருந்தவர்களிடமிருந்து மிக்க பேராசையுடன் அதிக பரிசுகள் பெற்றுக் கொள்ளக் கர்னல் ஹெரான் இசைந்ததால், மற்றொரு பகுதியும் அதேபோலக் குறைந்து