பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 150

விட்டது. அதற்கும் மக்புஸ்கான் கர்னல் ஹெரானின் மொழிபெயர்ப்பாளனோடு ஒப்பந்தம் செய்து கொண்டு அதிக வருமானம் வரத்தக்க மாகாணங்களை எல்லாம் குறைவான வருமானம் தரத்தக்கதெனத் தோன்றும்படி சூழ்ச்சி செய்தான். பிறகு மதுரை திருநெல்வேலி நாடுகளிலுள்ள விளைநிலங்களை எல்லாம் சேர்த்து, பதினைந்து நூறாயிரம் ரூபாய் ஆண்டு வாடகைக்கு எடுத்துக் கொள்ள முன்வந்தான். இக்காரியத்திற்குத் துணையாகக் கர்னல் ஹெரானுக்குப் போதுமான பரிசு கொடுக்கப்பட்டதால், அவன் இசைந்து, நாட்டின் அதிகாரத்தை மக்புஸ்கானுக்குக் கொடுத்தான். (பணம் என்றால் பிணமும் வாய்திறக்குமே! ந.ச.).

பாளையக்காரனின் ஒப்பந்தம்

கட்டபொம்ம நாயக்கனை எதிர்க்க அனுப்பப்பட்ட படை வடகிழக்கிலுள்ள சில்லின்னகென் பேட்டை என்ற பாளையக்காரரின் முக்கியமான கோட்டை வரை சென்றது. இக்கோட்டை எல்ல(லை?) நாயக்கன்பட்டி என்பதைக் குறிக்கிறது என்று நான் எண்ணுகிறேன். அவர்களைக் கண்ட பாளையக்காரன் அவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு, கப்பப் பணத்தில் ஒரு பகுதியை மட்டும் கட்டி விட்டு, எஞ்சிய பணத்திற்கு ஜாமீனாகச் சில ஆள்களையும் கொடுத்தான். அதேபோலச் சில தொகை சிறிய பாளையக்காரர் பலரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. ஆயினும், மொத்த வசூல் 70,000 ரூபாய்க்கு அதிகமாயில்லை. படைகள் திரும்ப வேண்டுமெனக் கட்டளை பெற்றவுடனே அவர்கள் கட்டபொம்ம நாயக்கனுக்கு அவன் ஜாமீன் ஆள்களை மீட்டுக் கொள்ளும்படி ஆள் அனுப்பினார்கள். ஆனால், அவன் இனி அவர்கள் அவனுடைய நாட்டில் காலந்தாழ்த்தித் தங்கமாட்டார்களென்பதை அறிந்து கொண்டு சில வீண் காரணங்களைக் காட்டி, மன்னிப்பு வேண்டினான். வேறு வழியின்றிப் பிணை ஆள்களையும் அழைத்துச் சொல்ல வேண்டிய துன்பமும் அவர்களைப் பிடித்தது (அந்தோ! - ந.ச.) மே மாதம் இரண்டாம் தேதி கர்னல் ஹெரான் திருநெல்வேலியை விட்டு வெளியேறினான். ஆனால், திருச்சிராப்பள்ளிக்கு நேரடியாகச் செல்வதற்குப் பதிலாக நெல்லிதங்கவல்லி என்ற கோட்டை வழியாகச் செல்லும்படி மக்புஸ்கான் தூண்டிவிட்டான். நெல்லித்தங்கவல்லி திருநெல்வேலிக்கு மேற்கே முப்பது மைல் தூரத்திலுள்ள ஒரு கோட்டை. நவாபுவின் அதிகாரத்திற்குட்பட மறுத்துப் பகை பாராட்டி வந்த ஒரு பாளையக்காரனுக்குச் சொந்தமானது. அக்கோட்டை வழியில் வடகிழக்கிலிருந்து மற்றொரு படை அவனுடன் வந்து சேர்ந்தது.