பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163 கால்டுவெல்


செலுத்த முயன்றதுமில்லை; தனக்கு அதிகாரம் உண்டு என்று உரிமை கொண்டாடியதுமில்லை. கப்பத்தைச் செலுத்திவிட்டுக் கப்பம் கட்டும் தலைவன் அரசனுடைய தேவையின் போது படைகள் அனுப்பிப் போரில் உதவி செய்தால் அவனுடைய நிபந்தனைகள் நினைவுபடுத்தப்படும். தென்னிந்தியாவில் திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கேயுள்ள பெரிய நிலப்பகுதி இத்தகைய பாளையக்காரர் வசம் இருந்தது. மதுரை, திண்டுக்கல் முதலிய இடங்கள் அரசனுடைய உடைமைகளாகவே இல்லை. திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக்கு வடக்கேயுள்ள நாட்டில் மிக பெரும்பகுதி பாளையக்காரர் வசமிருந்தது.

ஆங்கிலேயர் முதன்முதலில் திருநெல்வேலியில் அறிமுகமாகும் பொழுது அங்கு நிலவியிருந்த வறுமை அநீதி முதலியவைகளைக் கண்டு திருநெல்வேலி நாடு முழுவதும் பாளையக்காரர் கையிலிருக்கிறதா அல்லது பெயரளவில் மைய அரசின் வசம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள இயலாத நிலை இருந்து வந்தது. இந்த இரக்கத்திற்குரிய நிலைக்குப் பாதிக் காரணம் நவாபு அரசாங்கத்தாரின் வலிமையின்மையும் இலஞ்சம் வாங்குகின்ற குணமுமாகும். மற்றொரு பாதிக் காரணம் பாளையக்காரர்களின் தீராத அநீதி நிரம்பிய தொடர்ந்த சண்டைகளும் கலகங்களும் ஆகும். இங்குக் குறிப்பிடப்படும் காலத்தில் இறுதியாக நவாபு ஆங்கிலேயரை உதவி செய்ய அழைத்தபோது திருநெல்வேலியில் இத்தகைய பரம்பரைத் தலைவர் 32 பேர் இருந்தனர். அவர்களுள் ஒவ்வொருவரும் அகழியால் சூழப்பட்ட ஒரு கோட்டையையும் தம் அதிகாரத்தின் கீழ் ஆயுதம் தாங்கிய பெரிய படை ஒன்றையும் வைத்திருந்தனர். தம்மை அடுத்திருக்கும் நாட்டைக் கவர்வதே அவர்களின் தீராத முயற்சியாய் இருந்து வந்தது. முக்கியமாக எந்தக் கிராமத்தையும் வரிகளையும் அல்லது இன்னும் மைய அரசினர் வசமிருந்த எந்த உடைமையும் கவர்ந்து விழுங்குவதிலேயே கருத்தாயிருந்தனர்.

பாளையக்காரருக்குக் கீழ்ப்பட்ட ஆயுதபாணிகள் சாதாரணமாக ஓர்மினாலும் அக்காலத்து எழுத்தாளர்களாலும் ‘கூலிப்படைகள்’ என்று வழங்கப்படுகின்றார்கள். இச்சொல்லுக்கு மூலாதாரம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் முதலிய இடங்களை அடுத்த சுற்றுப்புறங்களில் வசித்து வந்த சுதந்தர கொள்ளைக்காரச் சாதியினர் அல்லது மரபினர்களிலிருந்து தோன்றியது. ஆங்கிலேயர் இவர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டனர். இவர்கள் கள்ளர்கள் என்று வழங்கப்பட்டார்கள். கள்ளர்கள் என்பதன் உண்மைப் பொருள் திருடர்கள் என்பது (‘கள்’ என்ற வேர்ச் சொல்லுக்கு ஒற்றி உணர்தல் என்றும் பொருள் கூறுவர் - ந.ச.). இச்