பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181 கால்டுவெல்


பரக்கத் துல்லா தன் குதிரைப்படையுடன் மதுரைக்குச் சென்றான். ஆனால், நபிகான் கட்டாக்கு திருவில்லிபுத்துருக்குச் சென்றான். அங்குக் கோட்டையைத் தாக்க வாய்ப்பில்லை. அக்கோட்டையில் சில சிப்பாய்கள் இருந்தார்கள். எனவே, நகரத்திலுள்ள கோவில் மதிற்சுவரேற முயன்றனர். அதில் ஒர் அந்தணன் உயர்ந்த வாயில் கோபுரத்தின் உச்சிக்குச் சென்று, அங்கு உரத்த குரலில் சாப மந்திரங்களைக் கூறித் தலைகுப்புறத் தரையில் விழுந்தான். அவன் மூளை சிதறியது. எதிரிகள் மகம்மதியர்களாயிருந்தபோதிலும், கோவிலைத் தாக்க முற்பட்டால், அச்செய்கை, அதுபோன்ற மேலும் பல உற்சாகமுள்ள பக்தர்களின் செயலைத் தூண்டிவிடும். அதனால் நாட்டில் பொதுவாகத் தங்கள்மேல் வெறுப்பு ஏற்படும் என்று எண்ணி அஞ்சி உடனே நகரத்தைவிட்டு வெளியேறினார்கள். (இப்படி, திருப்பரங்குன்றத்திலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது கல்வெட்டுகளால் விளங்குகிறது. - ந.ச.). அதற்குள் திருநெல்வேலியிலுள்ள குத்தகைக்காரர்களின் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காப்டன் காலியட்டு சதிகாரர்கள் திண்டுக்கல்லில் மைசூராருடன் உடன்படிக்கை செய்து ஆங்கிலேயரையும் அவரைச் சார்ந்தோரையும் தாக்க உதவி தேடினர் என்றும், பூலித்தேவர் ஐம்பது இலட்சம் ரூபாய் கொடுப்பதென்றும், அதற்கு ஈடாக மக்புசுகானின் ஜமேதார்கள் சோழ வந்தான் மாவட்டங்களை விட்டுவிட வேண்டுமென்றும் முடிவாயிற்று என்ற செய்திகளையும் அறிந்தான். சோழவந்தான் மாவட்டத்தில்தான் மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே ஒரே சாலை இருந்தது. அன்றியும், அது மிக்க பலம் பொருந்திய சாலையாகவும் இருந்தது. ஆயினும், நாட்டை வென்றதும் அதை மைசூரார்களுக்கா, மக்புசுகானுக்கா அல்லது யாருக்குக் கொடுப்பது என்பது முடிவு செய்யப்படவில்லை. மறவர் நாட்டில் ஒளிந்து வாழும் பழைய பரம்பரையைச் சேர்ந்த சந்ததியாருக்கே திருப்பிக் கொடுப்பதென்று முடிவாயிற்று. மக்புசுக்கானுக்கு மைசூரில் ஓர் அலுவலகம் ஏற்படுத்திக் கொடுப்பதெனவும் ஏற்பாடாயிற்று. இச்செய்தி மதுரையைக் கூடிய சீக்கிரம் தாக்க வேண்டிய தேவையை அதிகப்படுத்தியது. ஆனால், திருநெல்வேலியில் ஏப்ரலில் 10 ஆம் நாள் வரை நிலவரங்கள் ஒழுங்கு செய்து முடிக்கப்படவில்லை. அன்றைய தினத்திலே காப்டன் காலியட்டு 180 ஐரோப்பியர், 2500 சிப்பாய்கள், 6 பீரங்கிகள், 500 குதிரைகளுடன் தன் படையெடுப்பைத் தொடங்கினான். மகம்மது யூசுப் சிப்பாய்களை நடத்திச் சென்றான். முதலி அவனாலேயே சேர்க்கப்பட்ட குதிரைப்படையை நடத்திச் சென்றான். ஆறு கம்பெனிச் சிப்பாய்க் கூட்டங்கள் திருநெல்வேலியைக் காப்பதற்கும் அதே