பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 10


இந்திய இலக்கியங்களில் தாமிரபரணியைப் பற்றிய குறிப்புகள்

லெஸ்ஸன் (Lessen) என்பவர் தமது ‘இண்டிஸ்சி ஆல்டர்துனிஸ்கண்டி’ (Indische Alter thuni skunde Vol. 1) என்னும் நூலில் புகழ்பெற்ற பெயரையுடைய சிறந்த நதி என்று இதைக் குறிப்பிடுகின்றார். இதன் நீளத்தைப் பார்க்குமிடத்து இது உற்பத்தியாகுமிடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை ஏற்படும் வளைவுகளையும் சேர்த்து 70 மைல்களே உள்ள இந்த ஆறு நிச்சயமாக மிகச் சிறிய ஆறென மதிக்கப்படும். ஆனால், இது அளிக்கும் பயன்களைப் பார்க்குமிடத்து, இந்திய நதிகளுள் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. மிகப் பழைய காலத்திலேயே இதன் பெயர் இந்தியாவில் மிக்க புகழ் பெற்றிருந்தது என்று தெரிகிறது. இது பழம் பாடல்களில் பெயர் பெற்றிருப்பதால், ‘மிகப் பழமையான ஆறு’ என்று வழங்குவதற்குத் தகுதியைப் பெற்றுள்ளது என அறிகிறேன். பல புராணங்களின் நிலவளம் கூறும் பகுதிகளில் இந்திய நதிகளுள் இதன் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது குறிப்பாகப் புண்ணிய நதியென அந்தக் காலத்தில் போற்றப்பட்டிருந்தது என்பதும் தெரிகிறது. இது ‘மலையம்’ என்ற மலையில் உற்பத்தியாகின்றது என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இது தென்மலைத் தொடர்ச்சியில் மலையத்தை அடையாளம் காண உதவுகிறது. ‘மலயா’ என்ற வடமொழிச் சொல் மலை என்ற திராவிடச் சொல்லைக் குறிக்கிறது. அதைப் பற்றிய பழமையானதும் முக்கியமானதுமான குறிப்பு வடமொழியிலுள்ள மகாபாரதத்தில், ‘குந்தியின் மகனே! (தர்மன், பாண்டவ உடன்பிறப்பாளருள் மூத்தவன்) மோட்சத்தை அடையக் கடுந்தவம் புரிந்த தேவர்களின் ஆசிரமத்திலிருந்த தாமிரபரணியின் பெருமையைப் பற்றி மேலும் நான் உனக்கு நினைவு படுத்துகிறேன்’ - (ஆரணிய பருவம்) எனக் குறிக்கப்பட்டிருக்கிறது.

பிற்காலத்தில் இரகுவமிசத்தில் தாமிரபரணியைப் பற்றிய மிகக் கவர்ச்சியான பாடல் ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது வருமாறு: அவர்கள் (பாண்டியர்கள்) தாமிரபரணி ஆறு கலக்கும் கடலிலிருந்து திரட்டப்பெற்ற மிகச் சிறந்த முத்துகளை இரகுவின் முன் அவர்களுடைய காணிக்கையாக வைத்துத் தலை வணங்கினார்கள் (50). இதிலிருந்து ‘தாமிரபரணி ஆறு பாண்டி நாட்டிலிருந்தது; தாமிரபரணி கடலுடன் சேருமிடத்தில் முத்து எடுக்கப்பட்டது,’ என அக்காலத்திலேயே அறிந்திருந்தார்கள் என்பது தெரிகிறது. இப்பாடலின் ஆசிரியராகிய புகழ்பெற்ற காளிதாசர், கிறித்து பிறப்பதற்கு முந்திய நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று எண்ணுகிறார்கள். சிலர், கிறித்து பிறந்த