பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/198

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 190


பாளையக்காரன் அதிக தூரத்திலிருந்தபோதும், கூட்டணியில் அவன் மிக்க பலம் வாய்ந்த கட்சிக்காரனாதலின், அவனை முதலில் தாக்க முடிவு செய்தான். சமவெளியிலிருந்த அவனுடைய கிராமத்திற்கு நெருப்பு வைக்கப்பட்டது. அவன் கோட்டையைச் சூழ்ந்துள்ள காட்டிற்குள் துருப்புகள் நுழைய ஆரம்பித்தன. அதற்குள் மதராசிலிருந்த தலைவனிடமிருந்து அறிவுரைகளும் குறிப்புரைகளும், திருச்சிராப்பள்ளியிலிருந்த காப்டன் காலியட்டிடமிருந்து மிக முக்கியமும் தேவையுமான காரியங்களுக்கு அவனும் அவனுடைய படையும் மிகவும் அவசரமாக தேவைப்படுகிறது என்றும் செய்திகள் வந்தமையால் அவன் அங்குச் செல்லவேண்டி நேர்ந்தது. அப்பொழுது பிரெஞ்சுக்காரர்கள் மதராசையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் முற்றுகையிட்டமையால், அதைக் காப்பாற்றவே அவன் உதவி தேவைப்பட்டது. அடுத்து 1759 ஆம் ஆண்டு மே மாதத்தில் திருநெல்வேலி நாட்டிலுள்ள பாளையங்கோட்டையிலிருந்த சிப்பாய் படை மக்புசுகானுக்கு எதிராகப் போரிடுவதில் முனைந்திருப்பதாகச் செய்தி வந்தது. பூலித்தேவன் அதிகமான மற்ற பாளையக்காரர்களுடன் சேர்ந்து கொண்டான். எதிரிகள் போர்க்களத்திலிருந்து பின் வாங்கிய போதிலும் சிப்பாய் படை கோட்டைக்கு வெளியே தலைகாட்ட இயலாதபடி பல சிப்பாய்கள் கொலை செய்யப்பட்டார்கள்; சிலர் காயமடைந்தனர். போர்க்களத்தில் தொல்லையின்றிப் படைக்குறைப்பு ஏற்படும் நிலைமை உண்டானவுடனே மகம்மது யூசுபுகானைத் தென்னாட்டிற்கு அனுப்புவது என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது.

யூசுப்கானின் வருகை

யூசுபுகான் மே மாதம் 4 ஆம் தேதி மதுரையை அடைந்தான். 10 மாதங்கள் வரை அவன் அங்கு இல்லாதிருந்தான். அவன் அழைக்கப்பட்ட போது மதுரைக் கோட்டையில் ஆறு - பாளையங்கோட்டையில் ஐந்து- திருநெல்வேலியில் மூன்று ஆக மொத்தம் பதினான்கு சிப்பாய் படைப் பிரிவுகளை விட்டுச் சென்றான். இந்தப் படைப் பிரிவினரிடமிருந்து அவரவர்கள் காத்திருந்த கோட்டைப் பகுதிகளைக் காப்பாற்றுவதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அதன்படி நத்தம் காட்டிலிருந்து திருவாங்கூர் எல்லைவரை உள்ள இரண்டு மாநில மாவட்டங்கள் யாவும் அவர்களுக்கு வரி கொடுத்துத் தங்களைக் காத்துக் கொண்டன. வரி கொடுக்காதவை அவர்களால் சூறையாடப்பட்டன. செயிண்ட் டேவிட் கோட்டை கைவிடப்பட்டதிலிருந்து ஆரம்பித்த ஆங்கிலேயர் வீழ்ச்சியின் போது மகம்மது யூசுபு அங்கு அழைக்கப்பட்டிருந்தான்.