பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201 கால்டுவெல்


நெல்லித்தங்கவில்லிக்கு (நெற்கட்டுஞ்செவ்வலுக்கு) அருகேயுள்ள எல்லையிலிருந்து சிறிது அழிவுடன் சிதறடிக்கப்பட்ட ஏழு கம்பெனிச் சிப்பாய்ப் படைகளைத் தாக்க கட்டபொம்மநாயக்கன் இரண்டு அல்லது மூன்று ஆயிரம் வீரர்கள் தலைமையில் எட்டயபுரத்தருகில் தோன்றினான். மே மாதத்தில் மகமது யூசுபுக்குத் திண்டுக்கல்லிருந்து மைசூர்காரர்களால் ஏற்பட்ட எதிர்ப்பைப் பற்றிய செய்தியும், அதை எதிர்க்க அவனுக்குக் கட்டளையும் மாநிலத் தலைவரிடமிருந்து வந்தது. அதற்காக நாம் மேலே குறிப்பிட்ட 1500 சிப்பாய்களடங்கிய படையையும் 30 குதிரைகளையும் 3000 வேலையாட்களையும் அனுப்பி வைத்தான்.

டச்சுக்காரர்களின் படையெடுப்பு

அவர்கள் புறப்பட்டுச் சென்றதும் திருநெல்வேலி நாட்டில் எதிர்பாராத புதுக்குழப்பம் ஒன்று ஏற்பட்டது. இலங்கைத் தீவிலிருந்த டச்சு அதிகாரிகள் படாவியாவிலிருந்து பெரிய ஐரோப்பியப் படைகளை வரவேற்றனர். அவை கன்னியாகுமரிக்கு எதிரில் கொழும்பு துறைமுகத்தில் கூடியிருந்தன. அங்கிருந்து அவர்களுள் ஒரு பிரிவினர் ஜூன் தொடக்கத்தில் தூத்துக்குடியில் வந்து இறங்கினர். இது திருநெல்வேலிக்குக் கிழக்கே உள்நாட்டில் 40 மைல் தூரத்தில் அமைந்துள்ள ஒரு டச்சுக்கோட்டையாகும். இருநூறு ஐரோப்பியர்கள் பீரங்கித் துப்பாக்கித் தளவாடங்களுடன் கூடாரமடித்துக் கொண்டு தங்கினர். அவர்கள் படாவியாவிலிருந்து புறப்பட்ட அதே சமயத்தில் அவர்களுடன் கூட 400 ஐரோப்பியத் துணைப் படை புறப்பட்டுத் திருவாங்கூர் அரசனிடம் போய்ச் சேருவதற்காக மலபார் கடற்கரையிலுள்ள கொச்சிக்குச் சென்றிருப்பதாகவும் அறிவித்தனர். உள்நாட்டவர், இதனால் அதிர்ச்சியடைந்தனர். அன்றியும் திருநெல்வேலி நாட்டிலுள்ள ஆங்கிலேயரைத் துரத்துவதில் பாளையக்காரர்களுக்கு உதவி புரியவே இப்படை வந்திருக்கிறதென்றும் நகரத்தைத் தாக்கிப் போர் ஆரம்பமாகுமென்றும், பாவனை செய்தனர். மகமது யூசுப் உடனே தூத்துக்குடியிலுள்ள டச்சுத் தலைவனிடம் விவரம் கேட்டுக் கட்டளை அனுப்பினான். ஆனால், டச்சுத் தலைவன் எதுவும் கூற மறுத்துவிட்டான். சில நாட்களுக்குப் பின் துருப்புகள் உள்நாட்டில் முன்னேறிய பின் திருநெல்வேலிக்குத் தென்கிழக்கில் 20 மைல் தூரத்திலும், தூத்துக்குடிக்குத் தென்மேற்கில் அதே தூரத்திலுள்ள மிக்க செழுமையான மாவட்டமாகிய ஆழ்வார் திருநெல்வேலி (ஆழ்வார் திருநகரி)யில் தங்கினர். அதே சமயத்தில் 200 ஐரோப்பியர் அடங்கிய மற்றொரு படை கொழும்பிலிருந்து வந்து