பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 204


நிலைநிறுத்தி மாகாணத்தின் அதிகாரத்தை 1756 ஆம் ஆண்டில் அழகப்ப முதலியிடம் கொடுத்தான். பாளையக்காரர்களின் கொள்ளையடிப்புகளாலும், அழகப்ப முதலி பெற்றிருந்த கல்வியறிவை விட மிக்க திறன் தேவைப்பட்டமையாலும் நாட்டில் ஆங்காங்கே ஏற்பட்ட நிலை காரணமாக, யூசுபுகானே 1757 முதல் 1763 வரை முழு ஆட்சியாளனாக நியமிக்கப்பட்டான்.

யூசுபுகானின் ஆட்சிக் காலத்தில் முதல் மூன்று ஆண்டுகளில் அவன் ஓயாமல் பாளையக்காரருடன் போரிடடு வெற்றிகளைப் பெறுவதிலேயே முனைந்திருந்தான். கர்நாடகத்தில் ஏற்பட்ட இந்தக் குழப்பமான காலத்தில் கம்பெனிக்கு அவனுடைய படையின் தேவையும், அவனுடைய தனிப்பட்ட சிறந்த இராணுவத் திறமையும் நாட்டின் நடுப்பகுதிகளில் மிகத் தேவைப்பட்டது. ஆகவே அவன் நாட்டில் இல்லாத சமயம் நாடு பாளையக்காரர்களின் கொள்ளைகளுக்கும் அடுத்துள்ள திருவாங்கூர் நாட்டானின் துணைகொண்டு மக்புசுகான் துரோக சூழ்ச்சிகளுக்கும் நிலைக்களனாயிற்று. இச்சமயத்தில், மக்புசுகான் மாநிலத்திலேயே மிகச் செழிப்புள்ள தாலுக்காவாகிய களக்காடு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டான். யூசுபுகான் மதராஸ் முற்றுகையிலிருந்து திருநெல்வேலிக்குத் திரும்பிவரக் கூடும் என்ற நிலை ஏற்பட்ட போது தன் கூட்டுறவிலிருந்து திருவாங்கூர் அரசனை விலக்கியதுமன்றி அவனுடைய துணைகொண்டு பாளையக்காரர்களையும் தண்டித்தான். வலுவில் பலவந்தமாய்க் கைப்பற்றும் அதிகாரத்தினால் ஏற்படும் தீமைகளை அவன் பணியாற்றிய சூழ்நிலைகளை எண்ணிப்பாராது மனவலிமையாலும், இராணுவத் திறமையாலும் மாநிலம் முழுவதையும் தனக்குக் கீழ்ப்படுத்திக் கொண்டான். அவன் காலத்தில் பாளையக்காரர்களிடமிருந்து வரிகள் ஒழுங்காக வசூலிக்கப்பட்டன. தனிச் சொத்துக்கள் அவர்களுடைய கொள்ளைகளினால் பாதிக்கப்படவில்லை. சர்க்கார் நிலங்களின் வரி மிக அதிகமாக உயர்த்தப்பட்டன. 1761லிருந்து 1764 வரை ஏற்பட்ட அவனுடைய ஜமாபந்திகளிலிருந்து அவனுடைய அடக்குமுறையின் பயன் விளக்கமாகிறது.

1764 இல் தளவாய் அழகப்பமுதலி மேற்பார்வை செய்து வந்தான். ராஜா குருமத் ராமனுடைய ஆட்சி 1765-1769 வரை ஏற்பட்டது. ஷெயிக் முகம்மது அலி 1770 இல் ஆட்சி செலுத்தினான். சையத் முகம்மது கானுடைய ஆட்சி 1771 இல் தொடங்கி 1775 வரை நீடித்தது.