பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205 கால்டுவெல்


குறிப்பிடத்தக்க இரு சம்பவங்கள் இக்காலத்தில் நடைபெற்றன. 1771 இல் திருநெல்வேலி கச்சேரி (ஆவண காரியாலயம்) அதிலுள்ள ஆவணங்களுடன் தரைமட்டமாகும்படி தீவைக்கப்பட்டது. 1774 இல் வழக்கத்திற்கு மாறாகக் கடும் பஞ்சம் தோன்றியது. 1780இல் கர்நாடகத்தில் ஏற்பட்ட போரால் தூண்டப்பட்ட பாளையக்காரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை மீறி நிலம் முழுவதும் சூறையாடினர். இதன் பயனாய் சராசரி ஆண்டு வரி எட்டு இலட்சம் சக்கரத்திலிருந்து சராசரி ½ இலட்சம் சக்கரம் வரை குறைக்கப்பட்டது. 1783 இல் இர்வின் ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சியின்போது தொடங்கிய வரிவசூல் திரும்பவும் எட்டு இலட்சத்திற்கு உயர்ந்தது. இதுவரை லூஷிங்டன் அவர்களுடைய கூற்று. நாம் இப்பொழுது யூசுபுகானைப் பற்றியும் அவனது நல்வாய்ப்புகளைப் பற்றியும் கவனிப்போம்.

மகமது யூசுப்கானின் எதிர்ப்பு

1761இல் மதுரை பாளையங்கோட்டைகோட்டைகளில் கர்நாடக நவாபின் கொடியாகிய சர்க்கார் கொடி உயர்த்தப்பட்டது என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்தான் யூசுப்கான். மேலும் திருநெல்வேலி மதுரை மாநிலங்களை ஆண்டுக்கு ஏழு இலட்சம் வீதம் நான்கு ஆண்டுக்கு வாடகைக்கு விடுவதாகவும் தெரிவித்திருந்தான். பழைய குத்தகைக்காரர் தீர்த்தாரப்ப முதலி அதிகப் பணம் கொடுப்பதாகத் தெரிவிக்கவே நவாபு அதற்கு உடன்படவில்லை. ஆனால் யூசுபுகானின் உயர்நிலை இராணுவப் புகழ், தலையிட்ட காரியங்களை முடிக்கும் திறமை முதலியவற்றை எண்ணி யூசுபுகானையே அரசாங்கத்தினர் ஆதரித்தனர், என்றாலும் அவர்கள் நவாபுக்கு அவன் எழுதிய கடிதங்கள் பணிவின்றி இருக்கிறது என்று எச்சரிக்கை செய்தனர். மேலும் முத்துக் குளித்தலைப் பற்றியும் அவர்கள் துணி வியாபாரத்தின் பெருக்கம் முதலியவற்றைப் பற்றிய செய்திகளையும் கேட்டிருந்தனர். 1761 ஆம் ஆண்டு இறுதிவரை அரசாங்கத்தினருக்கு அவனுடைய நோக்கங்கள் இரண்டகமானவை என்று ஐயமே ஏற்படவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

நெல்சனுடைய பின்வரும் குறிப்புகள் இக்காலத்திற்கும் பொருத்தமாயிருக்கிறது:

1761 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுச்சேரியை ஆங்கிலேயர்கள் பிடித்தது கலகக்காரப் பாளையக்காரரை அச்சுறுத்தி ஒருவகையான அடக்கத்திற்கும் கொண்டு வந்தது. திருநெல்வேலி நாட்டிலிருந்து மகபுசுகான் சென்று விட்டதும் அவனுடைய உடன்பிறந்தானுடன்