பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/220

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 212


கலகக்காரனின் கொடிய முடிவிற்குப் பின் அவன் வீரத்தைப் பற்றிய எண்ணங்கள் சில நாட்கள் வரை நிலவின. சிறிது காலத்திற்குப் பின் அவன் பெயரைக் கேட்டு ஏற்படும் அச்சம் நீங்கி மக்கள் பழைய வழக்கங்களில் ஈடுபட்டனர்.

மதுரையைப் பொருத்தவரை, யூசுபுகான் மரணத்திற்குப் பின் அது அபீரல்கானின் ஆட்சிக்குட்படுத்தப்பட்டது என்று நெல்சன் கூறுகிறார். மேலும் அவர் கூறுவதாவது: மகம்மதியர் வலிமை பெற்ற காலத்தில் மதுரையிலிருந்த நிலையைப்பற்றி இந்த உயர் அதிகாரிகளில் ஒருவரின் பெயரனால் எனக்குச் சொல்லப்பட்ட பின்வரும் செய்திகளிலிருந்து நாம் கற்பனை செய்து கொள்ளலாம். அதன் உண்மையைப் பற்றி ஐயப்பட இடமில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. சுமார் 1772 இல் முழு நகரத்திலும் செங்கல்கற்களாலாகிய உறுதியான கட்டடங்கள் இரண்டிருந்தன. ஒன்று பழைய அரண்மனை, மற்றொன்று மகமதிய (மானேஜருடைய) மேற்பார்வையாளருடைய இருப்பிடம். மற்ற வீடுகள் யாவும் மண்ணாலும், பந்தல்களாலும், தட்டிகளாலும், ஒடுகளாலும் ஆகியவை. இதுவரை நெல்சன் கூற்று. மதுரை நாட்டில் இத்தகைய நிலை வியப்புக்குரிய தல்ல. திருநெல்வேலியிலோ அல்லது கிராமாந்தர மாநிலங்களிலோ எந்த ஒரு தனி வீடும் கற்களாலும் சுட்ட சுண்ணாம்பினாலும் 1781 இல் கம்பெனி அரசாட்சியினருக்கு நவாபின் வரிகள் உரிமையாக்கப்படுவதற்கு முன் வரை கட்டப்பட்டதற்கான அறிகுறியையே நான் எங்குத் தேடியும் காணவில்லை. முன்னாலிருந்த நிலை கொடிய ஆட்சிக்கும் பிறகு வலிமையும் அமைதியும் நிறைந்த ஆங்கில அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஒழுங்கு முறைக்கும் பாதுகாப்புக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துக்காட்ட மிகச் சிறந்த சான்றைத் தருகிறது.