பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/229

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221 கால்டுவெல்


அவனுடன் சேர்ந்து கொண்டான். 18 ஆம் தேதி இரவு காப்டன் கார்ப்பரை ஏமாற்றிச்செல்ல எதிரிப்படைகள் முயன்றது. ஆனால் அவை திரும்பும்படி தாக்கப்பட்டது. 19 ஆம் தேதி அவன் கோட்டையில் வழி ஏற்படுத்தப் பீரங்கித் தாக்குதலை ஆரம்பித்தான். ஆனால் அச்சுவர், சூரிய வெப்பத்தில் சுடப்பட்ட செங்கல்லால் (அக்காலத்தில் சூளை முறை இருப்பினும் இம்முறை ஏனோ? - ந.ச.) கட்டப்பட்டு களிமண்ணால் பூசப்பட்டிருந்தது. எனவே 500 வெடிகுண்டுகள் ஒரே இடத்தில் சுடப்பட்டும் பயனில்லாது போயிற்று. அப்பொழுது கணத்த மழை பெய்ய ஆரம்பித்து 25 ஆம் தேதி வரை நிற்கவே இல்லை. (அந்த ஆண்டில் வழக்கத்திற்கு மாறாகத் தென்மேற்குப் பருவக்காற்று சில வாரங்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துவிட்டது - ந.ச.) இதைச் சாக்கிட்டு எதிரிப் படைகள் மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து 20 ஆம் தேதி விடியற்காலை 4 மணிக்கே கேட்டையினின்றும் தப்பி அருகிலுள்ள மலைகளுக்குச் சென்று தப்பிவிட்டனர். முற்றுகையில் முதல் பீரங்கி வெடி நன்றாக வெடித்தது. ஆனால் மறுமுறை மழை காரணமாகப் பீரங்கிகள் வெடிக்கவே இல்லை. அவன் இக்கோட்டையைப் பற்றிக் கூறுவதாவது: "வாசுதேவ நல்லூர் கோட்டை நீண்டகாலத்திய சிறந்த கோட்டையாயிருந்தாலும், அவன் கண்ட நாடுகளுள் தானியம் விளையத்தக்க மிகச் சிறந்த நாடாக இது இருந்தாலும், அதைத் தரைமட்டமாக்காது தன்னிடமுள்ள நவாப் படை முழுவதையும் பீட்டர் டேவிட்சன் என்பவர் தலைமையில் அங்குக் காவலிருக்கும்படி செய்யத்தீர்மானித்தான். இந்த பீட்டர் டேவிட்சன் நவாபின் கீழ் காப்டன் பதவி பெற்றவன்; மிக்க பலம் வாய்ந்தவன் என்ற புகழ் பெற்றவன். அவன் முற்றுகையிட்ட இடங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த கோட்டை இதுதான் என்று அவன் எண்ணினான். (யூசுப்கான் முற்றுகையிட்ட குறிப்பில் இக்கோட்டையைப் பற்றிய விவரத்தைக் காண்க.) கூலிப்படைகள் சிறிதும் கவலையின்றிப் பீரங்கித் தாக்குதலுக்கு அஞ்சாது முன்நின்று உயிர்துறந்ததைக் கண்டு அவன் ஆச்சரியமடைந்தான். பீரங்கி வெடித்த பயனால் கோட்டை பிளவு கண்டவுடனேயே அவர்கள் துப்பாக்கி பீரங்கி குண்டுகளிடையே அமைதியாக 'பனைமரச் சக்கைகளையும் வைக்கோலையும் போட்டுப் பழுதுபார்த்துக் கொண்டேயிருந்தனர். நவாபினால் மக்கள் அல்லல் படுத்தப்படுவதே அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம் என்று முன்னைப் போலவே முடிவு செய்தான். அவன் படைகளால் மக்களுக்கு எதுவும் இடையூறு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொண்டான். எனினும் அரசின் கட்டளையைப் பெற்று மக்களுக்குச் சில வசதிகளையேனும் செய்து கொடுக்க ஆவலாயிருந்தான். நவாப் மேலும் காலத்தை வீணே கடத்த