பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/234

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 226


- ந.ச.) அந்த வேலை மேஜர் பிராய்த்வெயிட் வசம் ஒப்புவிக்கப்பட்டது. ஆனால் படைகள் மிக்க அவசரமாக வடக்கே தேவைப்பட்டமையால் அக்காரியம் வெற்றிகரமாக நடத்தப்படவில்லை.

1773 இல் திருநெல்வேலியில் குறிப்பிடத்தக்க எச்சம்பவமும் நடைபெறவில்லை.

1774 இல் கொடுமையான பஞ்சம் ஏற்பட்டது.

1775-இல் காப்டன் குக் அவனுடைய படையுடன் சென்னைக்கு மாற்றப்பட்டு அதற்குப் பதில் வேலூரிலிருந்து காப்டன் ஹாப்கின்ஸ் (Captain Hoppkins) மதராசுக்கு வந்த சம்பவம் ஒன்றுதான் ஏற்பட்டது. பாளையங் கோட்டையிலுள்ள இங்கிலீஷ் கோவில் பிரதேசத்தில் காணப்படும் மிக முந்திய தேதி 1775 ஆம் ஆண்டுதான்.

1776-1777இல் நவாபின் நிர்வாகி ராஜா குடுமத் ராமால் (Raja Kuhumat Ram) பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து துரத்தப்பட்ட கட்டபொம்ம நாயக்கன் திரும்பவும் வந்து அவனுக்குப் பதிலாக அவனிடத்தில் 1771 இல் சையது முகமது கானால் (Syed Mohamed Khan) நியமிக்கப்பட்ட பாளையக்காரனைக் கொன்றுவிட்டு மறுபடியும் அதிகாரத்தைக் கைப்பற்றினான். சையத் முகமது கான் அங்கு இல்லாமையால் நவாபினுடைய ஆட்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கருகே தங்கியிருந்த போதுமான குதிரைப்படையையும் காலாட்படையையும் திரட்டி அந்த இடத்தைக் கைப்பற்றும்படி கட்டளையிட்டான். அந்த ஆண்டில் பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்ற வேறு எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.

1777 - நவாபிடம் வேலை பார்த்து வந்த காப்டன் பிகார்ட்டின் (Captain Pickard) தலைமையில் நவாபின் இரண்டு போர்ப்படைகள் துப்பாக்கிகளுடன் பாளையக்காரரை எதிர்க்கத் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டது என்று காப்டன் ஹாப்கின்ஸ் பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அறிவித்தார். அந்தப் படை பாளையக்காரரிடமிருந்து நவாபுக்குச் சேர வேண்டிய வரியைத் திரட்ட அனுப்பப்பட்டது. ஆனால் வழக்கம்போல் அவர்கள் வரிசெலுத்த மறுத்துவிட்டனர். கூலிப்பட்டாளங்கள் அதிகமாகச் சேகரிக்கப்பட்டிருந்த, சிவகிரியைத் தாக்குவதுதான் இப்படையின் முக்கிய நோக்கு. இதில் விசித்திரமாகப் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்கள் 4000 மனிதர்களுடன் நவாபின் படையுடன் சேர்ந்துவிட்டார்கள். நவாபின் காரியாஸ்தனுடன் பாளையக்காரன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பயனே இந்த இணைப்பாகும்.