பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

239 கால்டுவெல்


மன்னனை ஹைதர் அலிக்கு எதிராகச் செய்யப்படும் திட்டங்களில் தங்களுக்குத் துணை செய்யுமாறு சென்னை அரசாங்கத்தினர் கேட்டுக் கொண்ட கடிதத்துடன், உடனே பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மன்னரைக் காணத் திருவனந்தபுரத்துக்கு விரைந்து சென்றார்.

திரு. ஆர்பன் விலக்கப்பட்டுவிட்டதால், அந்த இடத்திற்கு மற்றொரு உதவியாளரை நியமிக்கும்படி திரு. இர்வின் கேட்டுக் கொண்டார். பின்னர் கலெக்டராக வந்த திரு. டோரின் (Torin) அவனுடைய உதவியாளராக நியமிக்கப்பட்டார். அவனுக்குப் பிறகு திரு. கிண்டர்ஸ்லே (Mr. Kindersley) நியமிக்கப்பட்டார்.

திருநெல்வேலிக்குச் சென்றவுடனேயே திரு. புரோக்டரின் விவகாரங்களை விசாரிக்க நீதிமன்ற விசாரணை ஒன்றுக்கு அரசாங்கத்தினர் ஆணையின் பேரில் தலைமை வகித்தார். நீதிமன்றம் திரு. புரோக்டரின் கணக்குகள் மனநிறைவு தரவில்லை எனக் கருத்து தெரிவித்தது. புரோக்டரின் கணக்குகளில் அரசாங்கத்தினரின் உத்தரவின்றி அவர் செய்த பல சொந்த செலவுகளும் சேர்க்கப்பட்டிருக்கிறதெனக் கண்டு பிடித்தனர். மேலும் வரிவசூலில் எஞ்சிய தொகை இன்னும் அவன் கையிலேயே இருப்பதையும் கண்டு பிடித்தனர். இந்த முடிவின்பேரில், அவனை மாவட்டத்திலுள்ள வேலையிலிருந்து நீக்கி, மாநிலத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டனர். நேர்மைக்கு மாறாகச் சொந்த செலவு செய்த தொகையை எல்லாம் திருப்பித்தர வேண்டுமென அரசாங்கம் வற்புறுத்தியது. தவறினால் சென்னையிலுள்ள மேயர் கோர்ட்டில் அவனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்தது.

ஏப்ரலில் நாட்டின் நலனுக்குச் செய்யப்படும் ஒவ்வொரு திட்டத்தையும் நடைமுறையில் கொண்டுவருவதிலுள்ள இடையூறுகளைப் பற்றி இர்வின் அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். இடையூறுகளில் எல்லாம் முதன்மையானதும் முக்கியமானதுமான பாளையக்காரரின் அடங்காமையைக் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறுவதாவது: “கடந்த ஐந்து ஆண்டுகளாக அடக்குவாரும் ஒடுக்குவாரும் இன்றி இருந்த பாளையக்காரர் தற்போது அவர்களுடைய கடமை கவனிப்புகளை உணருமாறு செய்வது எளிதல்ல. கீழ்ப்படியாத் தன்மையுடைய அவர்களைப் படைபலத்தால் தான் அடக்க முடியும்" இதிலிருந்து கர்னல். புல்லர்ட்டனின் படையெடுப்புக்கான சூழ்நிலைகள் முற்றியிருந்தன என்பது தெளிவாய்த் தெரிகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக