பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

259 கால்டுவெல்


கூடாதென்ற அவர்கள் உறுதியையும் காட்டுகின்றது என்றும் குறிப் பிட்டிருக்கிறார்.

கர்னல் புல்லர்ட்டனின் கொள்கையின் பயனைப் பற்றிய டோரினின் எண்ணம் இர்வினுடைய எண்ணத்திற்கு முற்றிலும் மாறுபட்டிருந்த தென்பது விளக்கமாகத் தெரிகிறது. அவருடைய அறிக்கைகள் கர்னல் மாக்ஸ்வெல்லின் படையெடுப்புக்கு வழிகோலியது. ஆனால் அதன் பயன் முன்போ அல்லது பின்போ நடைபெற்ற அத்தகைய ஒவ்வொரு படையெடுப்பின் பயனைப் போலவே, நவாபு-கம்பெனி இருவரின் இரட்டை ஆட்சி நிலைத்திருக்கும் வரை ‘இரக்கத்தினாலோ’ அல்லது ‘உறுதியான தீவிர நடவடிக்கைகளாலோ’ நிரந்தர அமைதியை நிலை நிறுத்த முடியாது என்பதை உணர்த்திற்று. இரு எஜமானர்களையுடைய பாளையக்காரர்கள் எப்பொழுதும் இருவரையும் போட்டியிட்டு வெற்றி கண்டனர். அரசாங்கம் டோரினுடைய உற்சாகம் உழைப்பு இவற்றால் நிறைவு எய்தி, அவருடைய சம்பளம், படி இவற்றை இரு மடங்காக்கியது. அவர் ஓயாது-ஆனால் வெற்றியின்றி - பழைய குத்தகைக்காரனான தீர்த்தாரப்ப முதலி வசூல் செய்த வரிப்பணத்தைத் திரும்பித் தருமாறு மிக்க முயற்சியுடன் விரைவுபடுத்திக் கொண்டே இருந்தார் (160 ஆம் பக்கத்தின் இறுதியில் சில வரிகள் இல்லை).

சில நிபந்தனைகளின்மேல் நாடு மறுபடியும் நவாபின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட வேண்டும். எதிர்பார்த்த மாவட்டங்களில் திருநெல்வேலி மதுரை உட்பட திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கேயுள்ள மாவட்டங்களும் இருந்தன. வசூல் செய்த செலவுகள் போக எஞ்சிய வரிவசூல், கடனாக இருக்கின்ற கிஸ்தி தொகைக்குச் சரியாக ஆகும்வரை இந்த மாவட்டங்கள் கம்பெனியின் பிடிப்பிலிருக்க வேண்டும். ஒப்பந்தத்தின் ஒரு நிபந்தனை போர்க்காலங்களில் நாட்டின் ஆட்சிமுழுதும் கம்பெனியாரின் பிடிப்பிலேயே இருக்க வேண்டும் என்பதாகும்.

ஒப்பந்தம் தொடர்பாக ஒப்பந்தத்தின் தேதியாகிய ஜூலை 12ஆம் தேதியே டோரினுக்கு ஒரு புதிய பணி கொடுக்கப்பட்டது. அதன்படி அவர் ஜமீன்தார்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள பாளையக்காரப் பேஷ்களுக்கும் ஆணையாளராக (கலெக்டர்) நியமனம் பெற்றார். இது ஆக்கிரமிக்கப்பட்ட வரிவசூல் வாரியத்திலிருந்து (போர்டிலிருந்து) கூடிய விரைவில் பெறப்போகும் சிறப்பு கட்டளைகளுக்கு முன் கொடுக்கப்பட்டது. அந்தக் கட்டளைகள் லெப்டினண்ட் கர்னல் மாக்ஸ்வெல் தான் புதிதாக எடுக்கும் படையெடுப்பில் தனிப்பட சிறப்பாக அவனும் சேர்ந்து உழைப்பது பற்றிய தொடர்புடையது.