பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 18

இம்மூவரும் முதன் முதல் ஆட்சி செலுத்தி வந்தனர். கொற்கைக் கருகிலுள்ள முக்காணி (மூவர் சொத்து) என்ற இடத்தில் இம்மூவருக்கும் சொந்தமான பொது நிலங்கள் இருந்தன. காலப் போக்கில் பிரிவினை ஏற்பட்டது. பாண்டியன் தன் சொந்த வீட்டிலேயே தங்கிவிட்டான். சேரனும் சோழனும் பொருள் தேடி வெளியே சென்று வடக்கிலும் மேற்கிலும் தம் சொந்த அரசுகளை அமைத்தனர். இத்தமிழ்க் கதையின் எதிரொலி போன்றே அரிவமிசத்திலும் பல புராணங்களிலும் கதைகள் இருக்கின்றன. அதாவது, துருவாச முனிவரின் வளர்ப்பு மகனும், சந்திர மரபு சத்திரியர்களின் இளவரசனும் ஆகிய துஷ்யந்தன் அல்லது அக்ரிதா என்பவனுக்குப் பாண்டியன், கேரளன், கோளன், சோழன் என்ற நால்வர் ஆண் மக்களாய் இருந்தனர் (! - ந.ச.). இங்கே குறிப்பிடப்பட்ட கோளன் யார் என்பது தெளிவாய் இல்லை. அவன் மத்திய இந்தியாவிலுள்ள கோளர்களுக்கு அல்லது கோளனுக்கு மூதாதையாயிருப்பானோ! இது மிகவும் பொருத்தமற்றது. கோளன் என்பது கோளம் அல்லது கொளத்து நாடு - வடமலபார் என்பதுடன் பொருந்தி இருக்கிறது என விளக்கம் தரப்படுகிறது. இந்த விளக்கம் கடினமானது எனினும், நான் பார்த்தவற்றுள் இதுவே அறிவிற்கு உகந்த காரணமெனத் தெரிகிறது.

பாண்டியர்கள்

பாண்ட்யா (Pandya) என்ற வடமொழிச் சொல் தமிழில் பாண்டியன் என்று எழுதப்படுகிறது. இன்னும் முழுதும் தமிழாக்கப்பட்ட சொல்லாகப் பாண்டி என்ற சொல் தென்னிந்தியா முழுவதிலும் சாதாரணமாக வழங்கி வருகிறது. பாண்ட்யா என்ற சொல்லுக்கு நான் தமிழிலிருந்து மூலம் காணவில்லை (ஏன்? பழந்தமிழில் பண்டு என்றால் பழைய என்று பொருளாயிற்றே! - ந.ச.). மலையாளத்திலுள்ள பழைமையான பாண்டு என்பதும் எனக்குப் பொருத்தமாகத் தோன்றியது. எனினும், பாண்டவ சகோதரர்களின் தந்தையின் பெயராகிய பாண்டு என்ற வடமொழிச் சொல்லிலிருந்தே இச்சொல் பிறந்ததெனக் கருதுகிறேன். பாண்டுவின் வழிவந்தவர் என்ற பொருளில் ‘பாண்ட்யா’ என்ற சொல் அமைந்திருப்பதாகப் பாணினியின் அடுத்த வாரிசான காத்தியாயனர் குறிப்பிட்டிருப்பதாகப் பேராசிரியர் மாக்ஸ் முல்லர் (Max muller) தெரிவித்தார். புகழ் பெற்ற பாண்டவ உடன்பிறப்பாளரின் உறவினர்கள் என்ற உரிமை கொண்டாடவே பாண்டிய அரசர்கள் அப்பெயரைத் தங்களுக்கு அமைத்துக் கொண்டார்கள் என்பது தெளிவு. இந்த உறவுக்குச் சான்று காட்டவே பாண்டிய அரசனின் மகளை அருச்சுனன் மணந்தான் என்ற எழுத்தும் கற்பனையும் எழுந்துள்ளன. பாண்டிய அரசைப் பற்றிய பழைமையான