பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

269 கால்டுவெல்


ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி திருநெல்வேலி உட்பட கர்நாடகம் முதலிய இடங்களின் வரிவசூல் உரிமையை நவாபு ஆங்கில அரசாங்கத்தினரிடம் ஒப்புவிக்க வேண்டுமெனவும் போர்க்காலங்களில் வரி வசூலில் ஆறில் ஒரு பங்கை நவாபின் வாழ்க்கைச் செலவுக்காகக் கொடுக்க வேண்டுமெனவும் ஏற்பாடாயிற்று. இந்த ஒப்பந்தத்தின்படி சென்னையில் வரிவசூல் உரிமைமாற்றக் குழு நிறுவப்பட்டதை நாம் அறிவோம். இதை இயக்குவிக்க வரிவசூல் உரிமை மாற்ற மேற்பார்வையாளர்கள் (சூப்பிரண்டிண்டெண்டுகள்) என்பவர்களை முக்கியமான இடங்களில் ஆங்கில அரசாங்கம் நியமித்தது. திருநெல்வேலியிலும் அத்தகைய ஒருவரை நியமித்தது. போர் தொடர்ந்த காலத்திலும் இத்தகைய வரிவசூல் நீடித்திருக்க வேண்டுமென்ற போதிலும் உடனேயே நவாபு அதை விட்டுவிடமுயற்சித்தான். எனவே 1785 ஜூன் மாதத்தில் கம்பெனியார் வரிவசூல் உரிமையை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக அவனுடைய கடனுக்காக வரிவசூலில் ஒரு தொகையை அவனுக்குச் செலுத்த வேண்டுமெனவும் ஒழுங்கை நிலை நாட்ட எல்லைப் பாதுகாப்பளிப்பதாகவும் ஏற்பாடாயிற்று. 1787 பிப்ரவரி 24 ஆம் தேதி, வேறொரு உடன்படிக்கை ஏற்பட்டது. இதற்கும் முந்திய உடன் படிக்கைக்கும் ஆண்டுதோறும் செலுத்தப்படவேண்டிய தொகையைப் பொறுத்தமட்டில் சிறு மாறுதல் உண்டாயிற்று. ஆனால் இதிலுள்ள ஒரு முக்கியக் கட்டுப்பாடு யாதெனில் பாதுகாப்பு, வரி வசூலித்தல் அவனுடைய அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு அல்லது ஒழுங்கை நிலைநாட்ட அவனுடைய நாடுகளில் ஆட்சியை நிலைநிறுத்த ஆகிய ஏதேனும் காரியங்களுக்காக அவன் அரசாங்கத்தினரிடம் முறையிடும் போதெல்லாம் படையுதவி அளித்து அவன் விரும்பிய ஒழுங்கை நிலை நாட்ட உதவி செய்ய வேண்டுமென்பதாகும். ஆனால் சென்னை அரசாங்கமோ இரண்டு பிளவுபட்ட அதிகாரத்தை நிலை நாட்டவும், ஒழுங்கை நிலைநிறுத்த அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளைத் தடுக்கவும் கூடுமென்று கூறி அதை மறுத்துவிட்டது.

கர்னாடக வரிவசூலை ஏற்றுக் கொள்வதற்கும் செலவுத் தொகையை மேற்பார்வையிடவும் நம்மிடம் உடன்படிக்கைகள் செய்ய எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. எனவே எவ்வித உடன் படிக்கையுமின்றி 1790 ஆகஸ்டு 7ஆம் தேதி ஒரு அறிக்கையின் மூலம் நாட்டின் அதிகாரம் முழுமையும் சென்னை அரசாங்கமே ஏற்றுக் கொண்டது. முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்ட வரிவசூல் குழு ஒன்று உண்மையில் வரிவசூல் உரிமை மாற்றக் குழுவின் ஒரு பிரிவே ஆகும். அது சென்னையில் அமைக்கப்பட்டது. 1781 முதல் 1790 வரையுள்ள காலம் வரிவசூல் உரிமை பெற்ற காலம் எனவும் 1790 முதல் 1792 வரை