பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/330

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 322


யோட மிக விரும்புகிறார்கள் என்பது தெளிவாய்த் தெரிந்தது. எங்கள் குதிரைப்படை சில நூறு மூவடி தூரத்திற்கு வந்ததும் லெப்டினட் கிராண்ட் 'செயின்ட் ஜார்ஜ், சுடு' (தெய்வத் திருவடியார் பெயரால் சுடு வதற்கு ஆணையிடும் முறை...-ந.ச.) என்று உத்தரவிட்டார். அதே சமயத்தில் எதிரிகளும் நின்று முன்னேறிக் குதிரைகளின் மார்பில் ஈட்டகளைச் சொருகினர். அந்தத் தாக்குதலின் வேகத்திலே ஒரு வினாடியில் ( !- ந.ச.) பயங்கர அரணான எங்கள் படை உடைந்தது. பிறகு எங்கள் வீரர்கள் வீரமுடையவர்களாக ஆனால் திறமையற்ற காலாட்படைகளாகிய அவர்களைத் தனித்தனியே எதிர்ப்பதில் ஈடுபட்டனர். இடையே நல்வினை காரணமாக ஒரு அடர்ந்த காடு குறுக்கிட்டது (இயற்கை! - ந.ச.) அதன் வழியாகப் பகைவர்கள் தப்பிவிட்டனர். இந்தியாவில் கரிசல்மண் என்றழைக்கப்படும் மண்ணாலாகிய தரையில் குத்துச்செடிகள் வளர்ந்திருந்தன. இது எங்கள் வீரர்களுக்குப் பாதகமாயிருந்ததால் அதற்குள் நுழைய இயலவில்லை. ஆனால் பகைவனின் எதிர்ப்பு பலமாக இருந்தது. அதில் லெப்டினன்ட் கிராண்ட் நெஞ்சில் ஈட்டி குத்திக் காயமடைந்தார். அவனுடைய சுபேதார் ஷெயிக் இப்ராம் மற்றும் நான்கு குதிரை வீரர்களும் இறந்தனர். லெப்டினண்ட் லீன் தன் நாயக்கை இழந்தான். பதினோரு வீரர்கள் காயமடைந்தனர். இரண்டு குதிரைகள் கொல்லப்பட்டன. பதினோரு குதிரைகள் காயம் பட்டன. இறந்த பலருள் 96 இறந்தவர்களின் உடல்கள் போர்க்களத்தில் எண்ணப்பட்டன. பகைவர் காயமடைந்த எத்தனை பேர்களைத் தூக்கிச் சென்றார் என்பதை அறியமுடியவில்லை. கிராண்ட் தன் கையாலேயே நான்கு பேர்களைக் கொன்றார். பயங்கரமான காயம் பட்டபின் கடைசியாக ஒருவனைக் கொன்றார். அவருடைய சுபேதாரும் தான் இறப்பதற்கு முன் நான்கு அல்லது ஐந்து பேர்களைக் கொன்றார். அடுத்த நாள் மார்ச் 31 ஆம் தேதி கலகக்காரர்களின் ஜிப்ரால்டரைக் காணக்கூடிய எல்லைக்குள் நாங்கள் வந்து சேர்ந்தோம்.

முதல் தாக்குதலும், தோல்வியும்

நாங்கள் ஒழுங்கற்ற சாய்வு சதுரமாயிருந்த கோட்டையைக் கண்டோம். அதன் இரண்டு பக்கங்கள் ஏறக்குறைய 500 அடி இரண்டு அகலங்கள் ஏறக்குறைய 300 அடி மட்டும் இருந்தன. உறுதியும் ஒட்டுந் தன்மையுமுள்ள மண்ணினால் முழுக்கோட்டையும் கட்டப்பட்டிருந்தது.

பொதுவாக, அதன் சுவர் 12 அடி உயரமிருந்தது. அதில் சதுரமான கொத்தளங்கள் இருந்தன. அவற்றிற்கு மிகக் குள்ளமான இடை மதில்கள் இருந்தன. ஒரு சில பழைய துப்பாக்கிகள் அந்தக் கொத்தளங்களின் மீது வைக்கப்பட்டிருந்தன. முழுக் கோட்டையும் அடர்ந்த முள்