பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/333

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

325 கால்டுவெல்


வேறு ஆட்கள் நிறுத்தப்பட்டனர். இடையே 5000 பேர்களுக்கு மேற்பட்டவர்களால் எழுப்பப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட கூச்சல்கள் எங்களைப் பின்னேறச் செய்தன. முற்றுகையில் ஈடுபட்ட 120 ஐரோப்பியர்களில் 46 பேர் மட்டும் காயமின்றித் தப்பித்தனர். மொத்தப் படையினரின் அதிகாரிகள் பீரங்கிப்படை ஆகியவர்களைச் சேர்த்து 106 பேர்கள் கொல்லப்பட்டனர்; காயமடைந்தனர். காப்டன் சார்லஸ் டிராக்டர் தலைமையில் கம்பெனி சிப்பாய்களுடன், பாளையக்காரனின் ஆட்களடங்கிய படையும் எங்களுடன் சேர்ந்திருந்தது என்பதை நான் குறிப்பிட வேண்டும்.

எதிரிகளின் பலமான தாக்குதல்

நாங்கள் கோட்டையின் மேற்குப் பக்கத்திலிருக்கும் பொழுது வீரமும் நல்லெண்ணமும் நிறைந்த வீரர்கள் கோட்டையில் மறுபுறத்தில் மதிலேறிக் குதிக்க முயற்சிகள் செய்தனர். ஆனால் அவை பயனற்றவையாயின. அதனால் ஓரளவு இழப்பு ஏற்பட்டது எனினும் அதையறிந்த ஆணையார்ந்த (அதிகாரபூர்வமான) குறிப்புகள் எங்களிடம் இல்லை.

மேஜர் மெக்காலேயின் போர்க்கருவிகள் அவரது போர்க் குறிக்கோளுக்குப் போதுமானதாக இல்லை. துப்பாக்கிகள் பயன்படுத்தப் பட்டதால் உருச்சிதைந்ததுபோல முற்றும் பயனற்றவையாயிருந்தன. திருப்பித் தாக்குவதைப் பற்றி எண்ணவே இல்லை.

தற்போது அரசு எங்களுடைய கடமையின் முழுக் கொடுமைகளைக் கண்டு விழிப்புற்றனர். கர்நாடகத்தில் வெவ்வேறு இடங்களிலிருந்து மிகப்பெரிய உள்நாட்டுப் படைகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. எச்.எம்.77-வது ஆங்கிலப்படை மலபார் கரையிலிருந்து வரவழைக்கப்பட்டது. குதிரைப்படை அணி ஒன்று புறப்படும்படி செய்யப்பட்டது. திருச்சிராப்பள்ளியிலிருந்து பலம் வாய்ந்த பீரங்கிப் படை விரைவில் அனுப்பப்பட்டது. இதனுடைய படைத்தலைமை உயர் அதிகாரி ஒருவருக்கு மாற்றப்பட்டது. அவர் இராணுவ அனுபவம் வாய்ந்த மிகப் பெரிய வீரர். அடுத்து வந்த பல ஆண்டுகளுக்குப் புகழ் பெற்ற மிக உயர்ந்த இராணுவ அதிகாரியாக இருந்த கர்னல் பீட்டர் அக்னியூ என்பவராவார்.

பாஞ்சாலங்குறிச்சிக்கு எதிராகப் போரில் உதவி செய்யத் தேவையான ஒரு படைப் பகுதியைத் திருநெல்வேலி கலெக்டர் இலங்கை அரசாங்கத்திடம் விண்ணப்பித்து, அப்படையைப் பெற்றார். மேலிடத்து உத்தரவின்றி அவர் இதைச் செய்தார். அவருடைய செய்கையை மதராசு அரசாங்கம் ஏற்காது மறுத்து அச்செயலை விலக்கும்படி செய்தது.