பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/348

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 340


துன்பங்களும் மேற்குத் திசையாகச் செல்ல முற்படுவதை விடக் கூடுதலாயிருந்தன. எனவே கிழக்குத் திசையாகச் சென்று அந்த இடத்தை அடையும் எண்ணத்தை விட்டுவிடவேண்டியது இன்றியமையாததாயிற்று. அதன்படி திருப்பத்தூர் அருகிலுள்ள திருக்கடையூருக்கு வடமேற்குத் திசையில் படைகள் சென்றன. அங்கு சென்றவுடன், படைத் தலைவன் ஜேம்சு இன்சு (James Innes) தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து வந்த படையும் அதனுடன் சேர்ந்து கொண்டது. படைத்தலைவன் ஜேம்சு இன்சைப் படைத்தலைவன் ஜேம்சு என்றே திரு. ஹக்சு வழங்கினார். அந்தப் படை அண்மையில் விருப்பாட்சி பாளையக்காரனையும் அவனைச் சார்ந்தோரையும் அடக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் படையின் சேர்க்கையால் அப்படை குறைந்தது 7000 பேர் கொண்ட வலிமை வாய்ந்த படையாக மாறியது. அப்படை கிழக்கே அமைந்திருந்த சிறுவயலைத் தாக்க முன்னேறியது.

மருதுகளும் சிறுவயலும்

சிவகங்கை, இராமநாதபுரபாளையம் அல்லது சமீந்தாரியின் ஒரு பகுதியாக முன்பு விளங்கியது. அதை ஆண்ட மரபினர் மறவர் எனப்பட்டனர். அங்கு மறவர் இனத்தவர் மிகுதியாக இருந்ததால் ஆரம்பகால ஐரோப்பியர்கள் இராமநாதபுரத்தைப் பொதுவாக மறவர் நாடு என்று அழைத்தனர். இராமநாதபுரத்திற்கும் சிவகங்கைக்கும் பிளவு ஏற்பட்ட காலத்தில் சிவகங்கை விடுதலை பெற்ற நாடாயிற்று. இரண்டு மாவட்டங்களும் பெரிய மறவர், சிறிய மறவர் என்ற இரண்டு மறவர் நாடுகள் என ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்டன. அச்சொல் மறவர் என்றே எழுதப்பட்டு வந்தது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அப்பிளவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. சிவகங்கை மன்னர் தனிப் பரம்பரையைத் தொடங்கிவைத்த அன்றிருந்த, சசிவர்ணத்தேவரை, 1733 ஆம் ஆண்டு தேதியிடப்பட்ட சாசனம் ஒன்று விடுதலை உணர்வுமிக்க மன்னராகக் குறிப்பிடுகிறது. அப்பிரிவு உடன்படிக்கையினாலே ஏற்பட்ட ஒன்று ஆகும். அதன்படி 2/5 பரப்பளவு சிவகங்கைக்கும் எஞ்சிய 3/5 பரப்பளவு இராமநாதபுரத்திற்கும் சேர்ந்தது. மறவர்களின் சாதிப் பட்டம் தேவர் என்பது. ஆனால் இராமநாதபுரத்துத் தலைவன் அவனுடைய மூதாதையரின் தனிப்பட்டப் பெயராகிய சேதுபதி என்ற பட்டத்தால் தன்னை அழைத்துக் கொண்டான்.சேதுபதி எனின் இராமனுடைய பாலத்தின் தலைவன் என்பது பொருள். சிவகங்கை பாளையக்காரனின் குடும்பப் பட்டப் பெயர் உடையத்தேவர். ஆனால் அடிக்கடி அவன் நாலுகோட்டைத் தேவர் என்று கூட அழைக்கப்பட்டார்.நாலுகோட்டை என்பது அவன் நாட்டில் நாலு கோட்டையும் இருந்ததால் வந்த காரணப் பெயரில்லை. ஆனால்