பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

343 கால்டுவெல்


காடுகள் மீது படையெடுத்துக் கோட்டையை முற்றுகையிட்டு அவர்களை நாட்டை விட்டே விரட்டி விடுவதாகவும் கூறினேன். இந்துக்கள் காலந்தாழ்த்தும் குணமுடையவராயிருந்தாலும் அவர்கள் ஏறக்குறைய 40,000 ரூபாய்களைச் செலுத்தினர். எஞ்சிய கடன்தொகைக்கு அடமானமும் கொடுத்தார்கள். இந்த உடன்படிக்கை நான்கு நாட்களில் முடிந்து விட்டதால் அச்செய்தியை அனுப்பிவிட்டு அவர்களது சிந்தனையற்ற (பொறுப்பற்ற) போக்கை, 1773 இல் அதே இடத்திற்குப் படையெடுத்துச் சென்ற சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஓரளவு உளமார்ந்த நிறைவடைந்தேன். அதே நேரத்தில் காளையார் கோயில் கோட்டையைச் சுற்றிலும் அமைந்திருந்த காடு, வேலிகளை நம்பி உடன்படிக்கையில் இந்த அலுவலை முடிக்க எதிர்நோக்கிப் பாதுகாப்பிடத்திலே இருக்கிறோ மென்றெண்ணி இருந்த அரசர் அந்த இடம் திடீரென்று தாக்கப்பட்ட போது, அதனால் ஏற்பட்ட தாக்குதலில் (அரசர்) கொல்லப்பட்டார். முன் பதவியாளர் பட்டறிந்த கொடுமைகளை எண்ணிப் பார்க்குங்கால், அவர்களுக்குப் பின்வருபவர் அல்லது அவருடைய அமைச்சருக்கு ஏற்ற தண்டனைக் கடுமையைக் குறைப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.

மருதுகளின் இணக்கம் நீடித்து நிற்கவில்லை. 1789 இல் நவாபு அரசுக்கு ஓரளவு பணிவுள்ளவர்களாக்க அவர்களை எதிர்த்துப் படையெடுக்க வேண்டியது தேவையாயிற்று. திடமான எதிர்ப்புக்குப் பின் மருதுகளின் கோட்டையான காளையார்கோயிலைக் கைப்பற்றிய படைத் தலைவன் ஸ்டீவர்டு இந்தப் படையெடுப்புக்குத் தலைமை வகித்தான். அவனுக்கு மேற்குப் புறத்திலிருந்து அதிக எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால் தென்புறத்திலோ 1801 பேர் அடங்கிய படை மிக நெருக்கடியான நிலைக்குள்ளாயிற்று.

மருதுகள்

அக்காலத்தில் சிவகங்கையை ஆண்ட மருதுகள் உடன் பிறந்தவர்கள். பெரிய மருது என்று பொதுவாக அழைக்கப்படும் வெள்ளை மருது ஒருவர். சின்னமருது மற்றொருவர். அவர்கள் பழமையான பாளையக்காரர் குடும்பத்தைச் சார்ந்தவரும் அல்லர். அவர்களுடைய சாதிப் பிரிவைச் சேர்ந்தவரும் இல்லை. ஆனால் அக்குடும்பத்தினரால் உடன் துணைவராக நியமிக்கப்பட்டவர்கள். பர்வரா என்பது அத்தகைய சாதிப் பிரிவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லாகும். இத்தகைய பிரிவினரின் சிறப்புப் பட்டப் பெயர் சேர்வைக்காரர். அவர்கள் பாளையக்கார எசமானர்களுக்குத் தொண்டுசெய்யக் கடமைப்பட்டவர்கள். எனவே அக்காலத்திய ஆங்கிலக் கடிதங்களிலும், விவரங்களிலும் அவர்கள் செராகார்ஸ் அதாவது சேர்வைக்காரர்கள் என்று அழைக்கப்-