பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

373 கால்டுவெல்


களாகிய பாளையக்காரர், சேர்வைக்காரர், மற்ற மக்கள் மனத்திலிருந்தும் விலக்க விருப்பம் கொண்டார். (என்ன பரிவு! - ந.ச.) எனவே முன்னே குறிப்பிடப்பட்ட மன்றத் தலைவர் மேன்மை தங்கிய பிரபு கிளைவ், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த வீரபாண்டிய நாயக்கன் மூக்க நாயக்கன் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மூலப்பன் மற்றும் காவலில் இருப்பவர்கள் எல்லாருக்கும் நாடு கடத்தி - கடல் கடந்து அனுப்பும் தண்டனையை அளிக்க எண்ணியிருப்பதாயும், இவர்களைத் தவிர மற்ற பாளையக்காரர், சேர்வைக்காரர், உள்நாட்டார் எல்லாரும் கலகத்தலைவர்களால் தூண்டப்பட்டுத் துணிகரமான கலகங்கள் செய்தவர்கள் கம்பெனிக்கு எதிராகச் செய்த கொடுமைகளை மன்னித்து மனமார்ந்த நேர்மையான குற்ற மன்னிப்பு வழங்க முனைப்பாயிருப்பதாயும் அறிவித்தார். எனவே பிரிட்டிஷ் ஆட்சியின் வலிமையைப் போதுமான அளவு மக்களுக்கு உணர்த்துவற்காகவே அவர்கள் முன்னிலையில் கலகக்காரர்களுக்கு அளித்த தண்டனையை அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அளிக்காமல் நீக்கிவிடுவதாகவும் ஆளுநர் (கவர்னர்) உறுதியளித்துள்ளார்.

17. தென் பாளையங்களின் மக்களை அவர்களது சூறையாடிக் கலகம் செய்யும் வழக்கங்களிலிருந்து மீட்டு, அமைதிக்கான வழிமுறைகளை அமைத்து, பயிர்த் தொழிலை மேற்கொள்ளச் செய்து நலமே வாழத் தூண்டச் செய்தல் வேண்டுமென்ற நோக்கத்துடன் ஜார்ஜ் கோட்டை மன்றத் தலைவர் ஆளுநர் (கவர்னர்) லார்டு கிளைவ் எல்லாப் பாளையக்காரர்களுக்கும் அவர்கள் பாளையங்களைச் சேர்ந்த எல்லா மக் களுக்கும் பின்வருமாறு அறிக்கை விடுத்தார்; 'ஜமீன்தாரி ஆட்சி முறை அடிப்படையில் பாளையத்தின் தலைவர்களுக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு நிலையான வரிவிதிப்பு உண்டாக்க எண்ணியுள்ளது. வரி ஒருமுறை வரையறுக்கப்பட்டதும் எதிர்காலத்தில் மாறுதல்களுக்கு உரியதல்ல. இதன் மூலமாக அவர்கள் தங்கள் பரம்பரை எஸ்டேட்டுகளில் ஜமீன்தார்களாகலாம். அவர்களுக்கு எல்லா இராணுவக் கடமை களிலிருந்தும் (என்ன கடமை? யாருக்காக?! - ந.ச.) விதிவிலக்கு அளிக்கப்படும். அவர்களுடைய பரம்பரை உடைமைகளுக்கு வரை யறுக்கப்பட்ட விளக்கமான சட்டங்களினால் போதுமான பாதுகாப்பளிக்கப்படும். அதன் காரணமாக அரச அதிகாரிகள் அரசாங்க ஒழுங்கு சட்ட முறைகளைச் சீராக்கவும், மக்களுக்கு அவர்களுடைய உடைமைகள் உயிர், அந்தந்த இனத்தைச் சார்ந்தவர்களுடைய சமயப் பழக்கங்கள் எல்லாவற்றையும் காப்பதற்காகச் சட்டங்கள் செய்யப்படும். அச்சட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்காகவும், அரசு அதிகாரிகள் அரசின் புதிய நிபந்தனைகள் ஆணைகள் ஆகியவற்றை அறிந்து அதன்படி செயலாற்றுவதற்காகவும் அவைகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும்.