பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

391 கால்டுவெல்

பட்டியலையும் இன்றியமையாத பகுதிகளிலிருந்து சிலவற்றையம் வெளியிட்டிருந்தார். திரு. எலியட் (தற்போது சர் வால்டர்) விருப்பப்படி இந்தத் தமிழ் நினைவுக்குறிப்பு சுருக்கமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் ஆசிரியர் வேறு இரு ஆங்கிலேய உரோமன் கத்தோலிக்க மதப் பரப்பாளர்களின் துணையால் ஆங்கிலத்தில் எழுதி சென்னை இலக்கியக் குழுவின் வெளியீட்டில் 1840 ஆம் ஆண்டு ஏப்ரல் இதழில் வெளியிட்டார். இந்த நினைவுக் குறிப்பின் ஆசிரியர் பெஸ்கியின் வாழ்க்கையைப் பற்றிய முக்கிய நிகழ்ச்சிகளைக் கூறும் செய்திகள் எல்லாம் உடன்பாடானது என்று ஏற்றுக் கொள்ளப் போதுமான காரணங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் பெஸ்கி இந்தியாவுக்கு வந்தது, அவருடைய மறைவு இவற்றைக் குறிக்கும் தேதிகளில் அவர் வேறு செய்திருப்பதாக உறுதியாகத் தெரிகிறது. எவ்வளவு அறிவுக் கூர்மையுடையவராக இருந்த போதிலும் ஆவணக் குறிப்புகளைக் காணாமலும், அவருடைய குறிக்கோளுக்கு அவற்றைக் கண்டறிவது முக்கியமானது என்று எண்ணாமலும் இருந்த உள்நாட்டவரைப் பொறுத்தவரையில் இத்தவறு ஏற்படுவது இயற்கையேயாகும்.

பின்வரும் தேதிகளுக்கும், மற்ற குறிப்புகளுக்கும், உரோமிலுள்ள ஏசு சபையினருக்கு எழுதப்பட்ட கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளுக்கும் உரிய செய்திகளையும் மற்ற ஏற்புடையதான குறிப்புகளையும் திருத்தகு. பால் ரோட்டரி, எஸ்.ஜே. (Paul Rottari S.) மூல மாக திருத்தகு என். போகட் (Rey N., Pouget S, J) வழங்கியதற்கு நான், அவர்களுக்கு மிகவும கடமைப்பட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த வரையில் அவை இது வரையிலும் ஆங்கிலத்தில் வெளியிடப் படவில்லை.

கான்ஸ்டன்டைன் பெஸ்கி இத்தாலியிலுள்ள காஸ்டிக்லியன் (Castiglione) என்னுமிடத்தில் 1680 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் எட்டாம் நாள் பிறந்தார். 1898 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 21 ஆம் தேதி தமது பதினெட்டு வயதில் அவர் ஏசு சபையில் சேர்ந்தார். அவருடைய நாட்டு வாழ்க்கை வரலாறு ஆசிரியர், 1700 இல் அவர் இந்தியாவுக்கு வந்ததாகக் கூறுகிறார். ஆனால் மதகுரு போகட் அவ்வாறு இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறார். அவர் ஏசு சபையில் பயிலும் நிலையில் இரண்டு ஆண்டுகளைக் கழித்திருக்க வேண்டும்; பின்னர் நான்கு ஆண்டுகள் சமய சாத்திரங்களைக் கற்பதில் ஈடுபட்டிருத்தல் வேண்டும். ஏசு சபையின் எந்த உறுப்பினரும் இருபத்தைந்து வயதிற்கு முன் மதகுருவாக நியமிக்கப்படுவதில்லை.