பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 392

எனவே, அவர் 1706 ஆம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவுக்குக் கப்பலில் வந்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் கப்பல் பயணத்திற்குக் குறைந்தது ஆறு மாதங்ள் ஆகும். அவர் கோவாவை அடைந்தவுடன், அக்காலத்து வழக்கப்படி அவர் எந்த மாவட்டத்திற்கு நியமிக்கப் படுகிறாரோ அந்த இடத்தின் மொழியை - தமிழை - அவர் ஓரிரு ஆண்டுகள் அங்கேயே தங்கிக் கற்க வேண்டும் என்று கருதப்பட்டிருத்தல் வேண்டும். ஆகையால் 1710 ஆம் ஆண்டுக்கு முன் அவர் திருநெல்வேலியில் தன்னுடைய சமயத் தொடர்பானப் பணிகளைத் தொடங்கவில்லை என்று சொல்லப்படுவது நிகழக்கூடியதே. என்னைப் பொறுத்தவரை அந்த ஆண்டை ஒப்புக் கொண்டு திருநெல்வேலியை அவர் அடைந்த ஆண்டு மிகப் பிற்பட்ட காலமாகக் கொண்டாலும் கூட அது 1708 ஆக இருக்கலாம் என்று குறிக்கப்படலாம். அவர் தமிழ் கற்பதில் ஐந்தாண்டுகள் கழித்ததாகத் தமிழ் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். அவரைப் போன்ற சிறந்த அறிஞரொருவர் அவர் வாழ்ந்த காலம் வரை தமிழ் படித்துக் கொண்டிருந்தார் என்று ஐயமின்றி சொல்லப்படலாம். ஒரு சமயப் பரப்பாளராக அவருடைய பணி சரியாக எந்த ஆண்டில் தொடங்கப்பட்டிருந்தாலும் அவருடைய, அப்பணி திருநெல்வேலியில் தொடங்கியது என்பதிலும், அதேபோலத் தன்னுடைய இறுதி மூச்சை விடுவதற்காகத் திருநெல்வேலிக்கே அவர் வந்தார் என்பதிலும் இப்போது ஐயங்கொள்ள இயலாது.

பிரண்டலின் (Prandolini) திருநெல்வேலியிலுள்ள வடக்கன் குளத்தில் 1714இல் ஏசு சபையை நிறுவினார். அவர் 1714, 1715, 1716 ஆம் ஆண்டுகளில் பெஸ்கி திருநெல்வேலியிலுள்ள கமையநாயகன்பட்டியில் தங்கியிருந்ததாகவும், அங்கிருந்து கயத்தாற்றிற்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறுவதைக் குறிப்பிடும் போது நாம் நிகழக் கூடியவை என்று கூறும் நிலையைக் கடந்து, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுவோம். இப்போதிருப்பதைவிட மிக முக்கியமான இடமாக இருந்த கயத்தாறு, பாளையங்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் பாதையில், பாளையங்கோட்டையிலிருந்து 18 கல் தொலைவில் அமைந்துள்ளது. கமைய நாயக்கன்பட்டி எட்டையபுர ஜமீன்தாரியில் வடகிழக்குப் பக்கத்தில் உள்ளது. பெஸ்கி, குருக்கள்பட்டியில் அந்தணர்களால் கைது செய்யப்பட்டார். அவர்கள் அவரைக் கொலை செய்யும் நேரத்தில், கயத்தாறிலுள்ள கிறித்தவர்களால் காப்பாற்றப்பட்டார். குருக்கள்பட்டி, சங்கரநாயினார்கோயில் வட்டத்தில் உள்ள ஆலங்குளத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமம். கமையநாயகன் பட்டியிலிருந்து 1715 ஜனவரி 12 ஆம் தேதியிட்டுச்சங்கத்தின் பொதுத்தலை-