பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393 கால்டுவெல்

வருக்கு பெஸ்கியே எழுதிய கடிதத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அவரே குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் அந்தணர்கள் அவரைக் கொலை செய்ய எண்ணியிருப்பார்களா என்று நான் ஐயப்பட்டேன். ஆனால், அந்த எல்லாக் கிராமங்களிலுள்ள சுதேசி கிறித்தவர்களிடையே அத்தகைய செய்கை பற்றிய தெளிவான பழங்கதை நிலவுவதை நான் அறிந்தேன். குருக்கள்பட்டி கிராமம் அந்தணர்களுக்குச் சொந்தமானது. அங்குப் பாதி அளவுக்கு அந்தணர்களே வாழ்ந்து வந்தனர். அவர்களின் முன்னோர்கள் பெஸ்கியால் நிறுவப்பட்ட மாதா சிலையை உடைத்தனர். பெஸ்கியையும் அவரால் கிறித்துவராக்கப்பட்ட ஓர் அந்தணரையும் கிராமத்திலிருந்தே விரட்டினர் என்று சொல்லக் கேள்விப்பட்டதாக அவர்களே ஒப்புக் கொண்டனர். அவரால் நிறுவப்பட்ட மாதாசிலையில் சிதைவுகளை அவர்கள் காண்பித்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அடுத்தாற்போல் பெஸ்கி வடக்கே சென்று விட்டதாகத் தெரிகிறது.

முத்துசாமிப்பிள்ளை நினைவுக் குறிப்பிலிருந்து பெஸ்கி அவருடைய பணியைத் திருநெல்வேலியிலேயே முடித்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் திருநெல்வேலியிலேயே அவரது சமய விளம்பர வேலையையும் ஆரம்பித்தாரா என்பது இன்றுவரை தெரியவில்லை. மதப்பரப்பாளர், வாழ்வின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஏறக்குறைய முதல் ஏழு ஆண்டுகட்குத் திருநெல்வேலி அவரிடம் உரிமை பாராட்ட முடியும் என்று நாம் இப்போது அறிகிறோம். முக்கியமாக இந்த ஆண்டுகளில் இவரது அற்புதமான தமிழ் அறிவுக்கு இந்த இடம் அடி கோலியமையாலும் அதைவிட வியக்கத் தக்க முறையில் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்திய திறமையும், இந்த இடத்திலேயே, ஆகையால் திருநெல்வேலி தனது இலக்கியப் புகழ்பெற்ற அறிஞருள் ஒருவரை ஏற்றுக் கொள்ளும் உரிமையுடையது. மாறாக, இந்த உரிமைக்கு ஏற்புடையதாக அவருடைய எந்த நூலும் உரைநடையோ அல்லது செய்யுளோ திருநெல்வேலியிலிருந்து எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. அவருடைய மிகப் பெரிய காவிய நூலாகிய தேம்பாவணி 1726 இல் வெளியிடப்பட்டது. அதற்கான அவருடைய விளக்கம் 1729 இல் சேர்க்கப்பட்டது. வேத வினாவிடை மதபோதகர்கள் பயன்படுத்துவதற்காக இயற்றப் பெற்ற சிறந்த உரைநடை நூலாகிய வேதியர் ஒழுக்கம் 1727 இல் எழுதப்பட்டது. ஏசு சங்கத்தைச்சேர்ந்த கத்தோலிக்க கிறித்துவர்களிடையே நிலவிய அக்காலத்திய வழக்கப்படி, (தற்போது வழக்கத்திலிருப்பது போலவும்) பெஸ்கி உள்நாட்டுப் பெயரை வைத்துக் கொண்டார். தைரியநாத சுவாமி (யார்) என்பது அப்பெயர். இது அவருடைய கிறித்துவப் பெயராகிய கான் ஸ்டன்டயல் என்பதன் மொழி பெயர்ப்பாகும். தேம்பாவணி வெளியீட்-