பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 32


‘முனை’ என்று அவர் குறிக்கின்றார். இத்தீவு பாம்பன் தீவாகவே இருப்பின், அவருடைய இருவகை விளக்கமும் உண்மைதான். ஏனெனில், பாம்பன் நீண்ட ஒடுக்கமான தீவாய் அமைந்து பரந்த மணற்பாங்கான நிலத்தில் முடிகின்றது. கால்மியர் முனைக்கும் பாம்பன் தீவிற்கும் இடையேயுள்ள வளைகுடா இராமனது வில் (தனுசு) என்று கற்பனையாய் வழங்கப்படுகிறது. இவ்விரு கோடிகளாகிய முனைகளிலும் சிறப்பானது பாம்பன் தீவின் முனையிலுள்ள இராமேசுவரத்திலிருக்கும் கோடிதான். கோடி என்ற சொல் அயல்நாட்டவரின் உச்சரிப்பால் ‘கோரி’ என்று திரிந்தது. மிக உயர்ந்த மதிப்புள்ள எண்ணாகிய கோடி (எண்ணிக்கையின் எல்லை - கோடி! - ந.ச.) ‘குரோர்’ என்று அயலவரால் உச்சரிக்கப்பட்டு எழுதப்படும் எளிமையை எண்ணும்போது ‘கோடி’ ‘கோரி’யாக மாறியதன் காரணம் புலப்படும். கிரேக்கர்களுடைய கோரியைப் பற்றி ஒன்றும் அறியாமலேயே போர்ச்சுக்கீசியர்கள் அதே நிலமுனையை ‘கேப் ராமனா கொரு’ என்று வழங்கியது குறிப்பிடத்தக்கது (கால்டுவெல் தம்மவர் குற்றம் குறையையும் எடுத்துக்காட்டும் குணமே குணம்! - ந.ச.).

மன்னர் குடாவிலிருந்து பால்கன் நீரிணைப்பு (ஜலசந்தி) அல்லது தொண்டித் துறைமுகத்திற்குப் போகும் கப்பல்கள் நுழையும் வழி இப்பொழுது நேராய் இருப்பினும் முன்பு திருகலாய் அமைந்திருந்த ஆதாம்பால மலைத்தொடரின் இடையே செல்லும் கால்வாயின் அமைப்புக் காரணமாகப் ‘பாம்பைப் போன்றது’ என்ற பொருளில் அத்தீவிற்குப் பாம்பன் தீவு என்று பெயர் ஏற்பட்டது (ஆற்றுப் பெயர் ஆய்வுக்குப் புவியியல் அறிவு இன்றியமையாதது - ந.ச.). தீவின் கிழக்குக் கரையோரமாயுள்ள புகழ் பெற்ற கோவில் இராமேசுவரம். சைவர் கருத்துப்படி ‘ராமேசுவரன்’ என்ற பெயர் அமையக் காரணம் இராமனால் ஈசுவரன்போற்றி வழிபடப்பட்ட கடவுளை - சிவனை - அது குறிப்பதாகும். ‘இராமேசுவரன்’ என்ற கூட்டுச் சொல்லின் பிற்பகுதியாகிய ஈசுவரன் என்ற சொல் பெரும்பாலும் சிவனையே குறிக்கிறது. இப்பெயருடன் ஒத்துள்ள மற்றொரு பெயர் இராமநாதன். ‘இராமனாகிய தலைவன்’ என்ற பொருளுடைய இச்சொல் இராமநாதபுரம் என்ற சொல்லின் முற்பகுதியாகும். இந்த இராமநாதபுரம் குறுநில மன்னன் ஆட்சியின் (ஜமீந்தாரியின்) தலைநகரம். இந்த இராமநாதபுரம் குறுநில மன்னன் ஆட்சி (ஜமீந்தாரி)யிலேயே பாம்பன் அமைந்துள்ளது. இவ்வாறு இராமன் சிவபிரானை வழிபட்டது அவன் இலங்கையினின்றும் திரும்பி வந்தபோது நிகழ்ந்ததென நம்பப்படுகிறது.