பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 430



பிற்சேர்க்கை - II


1810-12ஆம் ஆண்டுகளில் திருநெல்வேலியில் வெள்ளப் பெருக்கும் கொள்ளை நோயும்

1810 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி திருநெல்வேலியில் ஒரு வெள்ளப் பெருக்கு நிகழ்ந்தது. கலெக்டர் ஹீப்ரு (Heburu) அவர்கள் இதனை 'மக்கள் நினைவை விட்டு அகலாத சம்பவம்' என்று குறிப்பிடுகிறார். பல்வேறு இடங்களில் ஆற்றின் கரைகள் உடைபட்டன; குளங்களும் கால்வாய்களும் சேதமடைந்தன, ஆழ்வார் திருநெல்வேலியில் 500 வீடுகள் வெள்ளத்தில் அழிந்து போயின.

1811 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலெக்டர் ஓர் அறிக்கை வெளியிட்டார். 'பிப்ரவரி இறுதியில் 100 நாட்கள் கடுமையான மழை பெய்தது' என்று அவ்வறிக்கை கூறுகிறது. அது மழைக்கும் வெள்ளத்திற்கும் உரிய காலமன்று எனவும் அதனால் கடற்கரை மக்களையும் பிற மக்களையும் வெகுவாகப் பாதித்தது எனவும் குறிப்பிடுகிறார் கலெக்டர்.

ஏப்ரல் 6 ஆம் தேதி கலெக்டர் மற்றுமொரு அறிக்கை வெளியிட்டார். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து பெருமழை பெய்ததாகவும் அதனால் கொள்ளை நோய் உருவானதாகவும் அறிக்கை கூறுகிறது. செவ்வமருதூரில் 50 வீடுகளில் கொள்ளை நோய் வந்து ஆளற்றுப் போனதாக கலெக்டரின் உதவியாளர் கூறுகிறார். இன்னொரு ஊரில் பலர் இறந்துவிட சிலர் ஊரைவிட்டே போய்விட்டதாக அறிகிறோம். பல இடங்களில் விளைந்த கதிர்களை அனுப்புவதற்கும் ஆளற்ற நிலை உருவானது.

கொள்ளை நோய்க்கு இருவகைக் காரணங்கள் கூறப்பட்டன ஒன்று, கடற்கரை ஓரத்தில் உள்ள உப்பின் நெடி இந்நோயை உருவாக்கியிருக்க வேண்டும். இரண்டு, திண்டுக்கல், மதுரை, கோவை ஆகிய இடங்களில் முதலில் இந்நோய் உருவாகி பின்னர் இம்மாவட்டத்திற்குப் பரவி வந்திருக்க வேண்டும். பழனிக்குச் சென்ற பக்தர்கள் அங்கேயே மாண்டனர். இந்நோய் மலைகளின் சுற்றுப்புறத்தாலேயே உருவா கியிருக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.