பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

441 கால்டுவெல்


முன்னர் மக்கள் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தனர் என்றும் அவர்களுக்கு இறப்பில்லை என்றும் நம்பினர். ஆனால் வயது ஆகஆக உருவம் குறுகிக் கொண்டே போகும் - மிகவும் குறுகிப் போனவுடன் மக்கள் அவர்களை மாடக்குழிகளில் வைத்திருப்பர். அவர்களுடன் ஒரு விளக்கும் பொருத்திவைக்கப்பட்டிருக்கும். பிறகு முதியவர்கள் துன்புற்றால் அவர்களை ஜாடிக்குள் வைத்த சிறிய பாத்திரங்களில் உணவும் நீரும் வைத்து ஊருக்கருகில் புதைத்துவிடுவர். இத்தகைய பழங்கதைகளை மக்கள் பேசி வருகின்றனர்.

பெயர்களைப் பற்றிய பொருள் விளக்கங்கள்

இத்தாழிகளுக்குத் தமிழில் வழங்கப்படும் பெயர் அதன் தொன்மை நிலை குறித்து தெளிவான விளக்கத்தைத் தரவில்லை. இப்பெயர் இத்தாழியின் அமைப்பை விளக்குகின்றது. தமிழகராதி இதனை முதுமக்கடாலி என்று குறிப்பிடுகின்றது. பொது மக்கள் இதனை முதுமக்கள் தாழி என்று குறிப்பிடுகின்றனர். இரண்டுக்கும் ஒரே பொருள் தான். தாழி என்றால் கொதிப்பிற்குரிய பெரிய ஜாடி என்று பொருள். ஜாடிக்குள் வைத்திருக்கும் முதுமக்கள் சிலவேளைகளில் ஜாடியின் வெப்பம் தாங்கமுடியாமல் வெளியே வந்து ஜாடிக்குள் அமர்வதாகச் சிலர் கூறுவர். 'மதோன் மத்தா' என்றால் பித்துப் பிடித்து என்று பொருள். ஆனால் தமிழில் மிகப் பெரிய என்ற பொருளிலும் இச்சொல் கையாளப் படுகின்றது. இதனைப் பஞ்சதந்திரக் கதையின் தமிழ் வடிவத்தில் காணலாம். சரியாகத் தமிழ் பேசுபவர்களைவிட பொதுமக்களின் பேச்சுத் தமிழில் வழங்கும் பெரிய என்ற பொருளே பொருத்தமாகத் தோன்றுகிறது.

புதைக்கப்பட்ட மக்கள் பிக்மிக்கள் அல்ல

தாழிகளில் புதைக்கப்பட்ட மக்கள் யாரென்ற ஐயம் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆனால் தாழிகளின் அமைப்பையும், அதனுள்ளிருந்த பொருட்களையும் கொண்டு ஒருவாறு கணக்கிட முடியும். எனவே, இவ் வாறு புதைக்கப்பட்டவர்கள் பிக்மிக்கள் அல்ல என்றும், ஆனால் அவர் களைப் போன்ற அளவுடையவர்கள் என்ற முடிவுக்கும் வரலாம். மண்டையோடும் தற்போதுள்ள மக்களுடன் ஒப்பிடக்கூடியவை. பற்களும் தானியங்களை உண்ணும் மக்களின் பற்களைப் போன்றே சிதைந்துள்ளன. ஸ்டூவர்ட் அவர்களால் திறக்கப்பட்ட ஆதித்த நல்லூர் தாழியில் சாமை கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அதில் தானியம் மறைந்து உமிமட்டுமே எஞ்சியுள்ளது. இதே இடத்தில் என்னால் திறக் கப்பட்ட தாழியில் ஒரு சிறிய செம்பு வளையல் கிடைத்தது. செம்பு