பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53 கால்டுவெல்


இராமேஸ்வரம் வரை முன்னேறி எல்லா நாடுகளையும் கைப்பற்றி அங்கே ஒரு மசூதியையும் கட்டினான் என்று பெரிஸ்டா என்பவர் கூறுகிறார். இராமேஸ்வரம் அல்லது பாம்பனிலுள்ள மகம்மதியர்களுக்கிடையே மாலிக்காபூர் ஒரு மசூதியைக் கட்டிய கதை நிலவவில்லை.

மகம்மதிய சரித்திராசிரியர்களின் செய்திப்படி இருபது ஆண்டுக் காலத்தில் மலபாரில் சுந்தரபாண்டியன் என்ற பெயரையுடைய அரசர் இருவர் இருந்தனர் என்பது தெரிகிறது. இது காரணமாக முக்கியமாக மார்க்கபோலோவின் சுந்தர் பந்தியும் கல்வெட்டுகளிலுள்ள சுந்தரபாண்டியனும் ஒருவனே என்று ஒப்புக் கொள்ளக் கர்னல் யூல் மறுக்கிறார் எனது திராவிட ஒப்பு இலக்கண நூலின் இரண்டாவது பதிப்பில் மீண்டும் இச்செய்தியைப்பற்றி நன்கு ஆராய்ந்து (பிற்சேர்க்கை பார்க்க) எனக்கு முன் கொண்டுவரப்பட்ட மறுப்புகளுள் சிலவற்றிற்குத் தக்க பதில் கூறியுள்ளேன்; 13 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையைச் சுந்தர பாண்டியன் ஆண்டுவந்தான் என்றும் மலபாரின் பாண்டிய சோழ நாட்டின் முதன்மையான தலைவன் என்ற பொருளில் தேவர் என்று வழங்கப்பட்டான் என்றும் இரண்டு மகம்மதிய சரித்திராசிரியர்களும் தெளிவாகக் கூறுகின்றார்கள். வெவ்வேறு வழிகளில் தங்களைப் பலப்படுத்திக் கொண்டு ஆட்சிக்கு வந்த நான்கு (அல்லது ஐந்து) உடன் பிறந்தார்களுள் இவன் மட்டும் தேவர் என்று வழங்கப்பட்டான். மேலும், இவன் ஏராளமான செல்வத்தைப் பெற்றிருந்தான் என்பது கூறப்படுகிறது. மார்க்கபோலோவும் அவனுடைய உடன்பிறந்தார்களைப் பற்றிக் கூறும்போது மட்டும் முடிசூடிய அரசன் என்று குறிப்பிடுகிறார். அவனை வேறு படுத்திக் காட்டுவதற்காகவே பந்தி என்ற விருதை அவர் அளித்திருக்கிறார். இதிலிருந்து சில காரணங்களால் அவன் மிகச் சிறந்தவனெனக் கருதப்பட்டான் என்பது தெரிகிறது. சுந்தரனுடைய கல்வெட்டுகளில் அவன் சகோதரர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார்கள் என்பதைப் பற்றியோ, அல்லது அவனும் அவனுடைய உடன்பிறந்தார்களும் வகித்துவந்த பதவி அவர்கள் பரம்பரை உரிமை வழிப் பெறப்பட்டு வலுவில் அடையப்பெற்றது என்பது பற்றியோ ஒருவிதச் செய்தியும் இல்லை. ஆனால், இச்செய்திகள் அவர்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்க வேண்டியன அல்ல. அவனுக்கு உடன் பிறந்தார்கள் இருந்தார்கள். அவர்கள் அவனுடன் சேர்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்ற எண்ணத்திற்கு ஒவ்வாத செய்திகள் கல்வெட்டுகளிலும் மரபுவழிக் கதைகளிலும் இல்லை. இவற்றை எல்லாம் சேர்த்துப் பொருத்தமாகச் செய்ய ஒரு வகையில் சுந்தரபாண்டியன் மட்டும் பாண்டிதேவராகவோ